ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை: அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே...(வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே இவ்விஷயத்தில் சான்றாகும்.
ஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம் இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா ?!
தந்தை வரட்டும்; கல்யாணம் முடிக்கலாம்...
இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் பார்ப்போம். தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர். பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்ததுவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். வில்லை நன்கு பார் என்று முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள். அப்போது, ராமன் உரைக்கிறான்... வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.
அவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை! மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.
தர்மமே வடிவெடுத்து வந்தது!
சீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப்பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். ?அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன. முன்பு ராமன் என்னை அடித்தபோது பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை. சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திருக்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான் என்றான். அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்யஸா ஜநகாத்மஜா என்பது மாரீசன் வாக்கு. மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். ராமோ விக்ரஹவாந் தர்ம; எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை தர்மமே வடிவெடுத்தான் என்று கொண்டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.
குணத்தில் தோற்ற விபீஷணன்; வீரத்தில் தோற்ற ராவணன்!
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: என்று போற்றுகிறான். அதாவது, தனது பராக்கிரமத்தைக் காட்டி எதிரியை வியக்கச் செய்பவன் என்று ஸ்ரீராமனைக் கொண்டாடுகிறான். ராமனின் வீரத்தில் தோற்றான் ராவணன், ராமனின் அழகில் தோற்றாள் சூர்ப்பணகை. ராமனின் குணத்தில் தோற்றான் விபீஷணன். இது, ஸ்ரீராமனின் தனிப் பெருமை அல்லவா ? குகனோடும் ஐவரானோம் என்று படகோட்டி குகனையும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்ட தன்மை... இன்றளவும் நாம் போற்றும் ஸ்ரீராமனின் சிறப்பல்லவா?
புல் பூண்டுக்கும் மோட்சம் தந்தவன்
தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது?! பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே! பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே !
இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர். எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்று போற்றுகிறார். எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.
குழந்தை பாக்கியத்துக்கு ராமனிடம் வேண்டுதல்: நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ராமபிரானை மனதில் நினைத்து இந்த பிரார்த்தனையை செய்தால் ராம சகோதரர்களைப்போல் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். நாராயணீயம் எழுதிய நாராயணபட்டத்திரி என்ற பிரார்த்தனையை எழுதியுள்ளார். இறைவா! தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா! ராமனாக அவதாரம் செய்த குருவாயூரப்பனாகிய தாங்கள் இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தையும், கவசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள். ராவணனோடு சண்டை செய்து அவனுடைய எல்லா தலைகளையும் பிரம்மாஸ்திரத்தால் வெட்டி தள்ளினீர்கள். தீயில் குளித்த தூயவளான சீதையை திரும்பவும் ஏற்றுக் கொண்டீர்கள். வானர கூட்டங்கள் காயம்படாமல் இருந்தன. இறந்த வானரங்களை தேவர்கள் கூட்டம் பிழைக்க வைத்தது. இலங்கையின் மன்னனான விபீஷணனுடனும், பிரிய மனைவியான சீதாதேவியுடனும், அன்புக்குரிய லட்சுமணனுடனும் புஷ்பக விமானத்தில் உங்கள் சொந்த நகரமான அயோத்திக்கு சென்றீர்கள்.(இந்த பிரார்த்தனையை சொன்னால் குழந்தை பேறு மட்டுமின்றி, பால் வளம் பெருகும் என்பதும் ஐதீகம்).
இப்படி பிரார்த்தித்தால் வீட்டுக்கே வருவார் ராமர்: ராமபிரானை பற்றி சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருது பாடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.ஏ நாக்கே! ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் என்னும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமமே. ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளிவேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.
ராமனுக்குள் அடங்கிய ரமா: சிலர் ஸ்ரீராம ஜெயத்தை வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்காக எழுதுகின்றனர். இவை நிறைவேறுவது மட்டுமின்றி, அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியை இந்த மந்திரம் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ரா என்றால் இல்லை, மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது ராமனின் பொருள்.
ராமநவமியன்று ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும்; எல்லையற்ற புண்ணியம் கிட்டும். ராமநவமியில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல். பிள்ளைப் பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள ரா வும் ம வும் இணைந்து உருவானதே ராம எனும் மந்திரம். இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானாதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக் கூடியது. ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்களெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும் ம என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டு வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர். வால்மீகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதிவிட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் அற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து, அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர். முன்னதாக பிரம்மா நூறு கோடி சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றியதாகவும்; அதை வால்மீகி 24, 000 சுலோகங்களுடன், பல கிளைக் கதைகளைக் கொண்டு 500 சர்க்கங்கள், ஆறு காண்டங்கள் உள்ளதாக எழுதினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ராமபிரான் முடிசூடிக்கொண்டபின் அஸ்வமேத யாகம் செய்தார். அதன்பின் அஸ்வமேத யாகத்தைவிட பத்து மடங்கு பெரிதான வாஜபேயம், நூறு மடங்கு பெரிதான ஸுவர்ணகம், கோஸவம், அதிராத்திகம், அக்னிஷ்டேமம் ஆகிய யாகங்களையும் 16 ஆண்டுகள் செய்தார். இவற்றுக்கு வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கச்யபர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், பரத்வாஜர், துர்வாசர், பார்கவர், வாமனர், மார்கண்டேயர். மவுத்கல்யர். கர்க்கர், சியவனர், சதானந்தர், சுப்ரமர், அகத்தியர், அத்ரி, வால்மீகி போன்ற ரிஷிகளும் முனிவர்களும் துணையிருந்தனர்.
ஸ்ரீ ராமருக்கு விருந்து: பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.
வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்
இப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.
அப்படி என்ன பேரழகி அவள்?
ராமர் ராவணனைப் போரில் வென்றார். இலங்கை அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டினார். விழா முடிந்ததும் சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் வானரங்களையும் அழைத்துக் கொண்டு, இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார். விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. விமானத்திலிருந்து ராமர் கீழே இறங்கினார். கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின. அவற்றுக்குத் தங்கள் கணவரைப் பார்ப்பதற்கும் முன்னால் சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்படி என்ன பேரழகி அவள்? அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர்? என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ? நம்மைப் போல் இவளுக்கு ஒரு வால்கூட இல்லையே!
பெண்களை ஏறிட்டும் பார்க்காதவர்
ராவணனின் படையில் 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இவர்கள் தனி ஒருவனாக நின்று ராமன் வெற்றி பெற்றார். ராமனின் வீரதீரத்தை சுவாமி தேசிகன், அஸஹாய ஸூர! அநபாய ஸாஹஸ! என்று போற்றுகிறார். ஜனஸ்தானம் என்ற இடத்தில் இருந்த கரன், தூஷணன் உள்பட ராட்சஷர் அனைவரையும் ராமன்கொன்றார். அவர்களுடன் அகம்பனன் என்ற அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது இதன் பொருள். ராமன், தன்னைக் கொன்று விடுவானோ என்று, அவன் கூட நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன் வந்து நின்றான். ராமன் அசகாய சூரனாக இருக்கிறான். அவன் விடும் பாணங்கள் காட்டுவெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டதாக உள்ளன. கரன், தூஷணன் மாண்டு விட்டனர். நான் தப்பி வந்தேன், என்று சொல்லி தலை குனிந்தான். ராவணன் உரக்கச் சிரித்தான். நீ மட்டும் எப்படி தப்பித்தாய்?, என்றான். ராமன், ஏகபத்னி விரதன் என்பதால் அதையே எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப் போல வேடமிட்டேன். ராமன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை. ஏமாந்து போனான், என்றான்.
கோரிக்கை வைக்க சிறந்த இடம்
ராமர் வாலி மீது மறைந்திருந்து அம்பு விடுத்தார். குற்றுயிராகக் கிடந்த வாலி, மறைந்திருந்து அம்பு தொடுத்தது ராமர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். சக்கரவர்த்தி திருமகனான நீ, என் மீது என்ன குற்றம் கண்டு இவ்வாறு செய்தாய்! உன்னிடம் இரக்கம் இல்லாமல் போனது ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. தாய் போல இருக்கும் சீதையை நீ பிரிந்த காரணத்தால், இப்படி ஒரு துயரத்தைத் தந்து விட்டாயோ! ஏனெனில், அவள் உன்னுடன் இருந்தபோது, அவளுக்கு துன்பம் செய்த காகாசுரனுக்கு கூட வாழ்வு அளித்தாய். ஆனால், ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணம் கொடுத்தாய்! என்று சொல்லி உயிர் விட்டான். நமது கோரிக்கை சீதாபிராட்டியார் மூலம்தான் நிறைவேறும். எனவே, ராமனிடம் நம் கோரிக்கையை வைப்பதாய் இருந்தால், அதை சீதை மூலமாக வைப்பது உடனடி பலன் தரும்.
கடவுளுக்கே மூச்சளித்தவர்
பகவான் பெரியவரா, பக்தன் பெரியவனா என்றால் பக்தனே பெரியவன் என்கிறார் ராமபிரான். ராமலட்சுமணருக்கு போர்க்களத்தில் இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவிமலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமான். அதற்கு முன்பும் ஒருமுறை, ராமனுக்கு அவர் உயிரளித்திருக்கிறார். ராவணனின் தம்பி விபீஷணன், ராமனுடன் நட்பு கொள்ள வந்தான். இது ராவணனின் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவுபார்க்க அனுப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம் என சுக்ரீவன் உள்ளிட்ட வானரர்கள் கூறினர். ராமனோ, அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே இறைவனின் பணி. அந்த தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் ராமன் இருந்தார். இல்லாவிட்டால், தர்மம் செத்து விடும். தர்மம் செத்தால் ராமனுக்கும் உயிர் இருக்காது. இந்த நிலையில், அனுமன் ராமனின் கருத்தை ஆமோதித்துப் பேசினார். பின், எல்லாரும் ராமனின் கருத்தை ஏற்றனர். ஒருவேளை அனுமனும் மறுத்திருந்தால், ராமனுக்கு மூச்சே நின்றிருக்கும். அனுமனின் ஆதரவான பேச்சு ராமனுக்கு மூச்சைத் தந்தது. காரணம், அவர் வாயுவின் பிள்ளை. மூச்சுக்கு பிரதானம் காற்றுதானே!
சீதைக்கும் விசாலாட்சி பெயர்
காசி விஸ்வநாதர் கோயில் அம்பாளை விசாலாட்சி என்பர். அயோத்தியில் வசித்த சீதையையும் விசாலாக்ஷ்யா என்று பெயரிட்டு அழைக்கிறார் வால்மீகி. விசாலமான கண்களை உடையவள் என்று அதற்குப் பொருள். இந்தப் பெயர் வந்த காரணம் தெரியுமா? நாளை ராமனுக்கு பட்டாபிஷேகம். முதல்நாள், அயோத்தியிலுள்ள ரங்கநாதரைத் தரிசிக்க ராமனும், சீதையும் செல்கின்றனர். நாராயணனே ரங்கநாதன், நாராயணனே ராமன். அதாவது அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே! என்கிற நிலை. தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன். மானிடனாகப் பூமியில் பிறந்து விட்டதால், இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான். இப்படியொரு அரிய காட்சியைக் காணும் பாக்கியம் யாருக்காவது கிடைக்குமா? அது தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த சீதை, அவனை இமை கொட்டாமல், விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால், அவளுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.
பேர் வைக்கிறதிலே கவனம்!
ராமன், ராம் என்றெல்லாம் பெயர் வைத்தால் பாராட்டலாம். காரணம் ராமன் என்ற சொல்லுக்கு ரமிக்கச் செய்கிறவன், ஆனந்தப்பட செய்பவன், இதயத்தில் ரம்மியமாய் வாசம் செய்யக்கூடியவன் என்று பொருள். ராமனின் எதிரி ராவணன். இதற்கு பிறரை சிரமப்படுத்துபவன், பிறர் மனதை அறுக்கக்கூடியவன் என்று பொருள். ராமன் பெயரை வைக்கலாம். ராவணன் பெயரை வைக்கலாமா? பெயருக்கேற்றாற் போல், குணமும் மாறி விடும். ஜனகர் தந்த வில்லை ஒடிக்க ராமன் எழுந்தவிதம், ஹோம குண்டத்தில் நெய்யை ஊற்றியதும், அக்னி படீரென கொழுந்து விட்டெரியுமே...அப்படி இருந்தது. ஒரு குரங்கு, இலங்கையை துவம்சம் செய்கிறது என்று கேள்விப்பட்ட ராவணன் ஆவேசமாக எழுந்த விதம், மயானத்தில் சிதை எரியும் போது எழுந்த தீயைப் போல இருந்தது என்கிறது ராமாயணம். இனியேனும், குழந்தைகளுக்கு நல்ல பெயர்களைத் தேர்ந்தெடுங்கள்.
சத்தியம் தவறாத உத்தமன்
ராமன் சத்தியசீலன். தன் உயிருக்கு தானே குறித்துக் கொண்ட நாளில் வைகுண்டம் புறப்பட்ட நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வைக் கேளுங்கள். ராவணனால் நாங்கள் சிரமப்படுகிறோம் என தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். தேவர்களே! நான் பூமியில் பிறப்பேன். பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழித்து விடுவேன், கவலையை விடுங்கள், என்றார். அவர் சொன்னபடியே வாழ்ந்தார். 11000ம் ஆண்டின் கடைசி நாள் வந்தது. எமதர்மன் அயோத்தி அரண்மனை வாசலுக்கு வந்து, வாயில் காப்பவனிடம், ராமனைப் பார்க்க வேண்டும், என்றான். ராமன் உடனே அனுமதியளித்தார். ஐயனே! நான் எமன் வந்திருக்கிறேன், இன்றோடு முடிகிறது, கிளம்பலாமா? என்றான். ராமன் நினைத்திருந்தால், எத்தனை வருஷம் வேண்டுமானாலும் தன் ஆயுளை நீட்டித்திருக்கலாம். ஆனால், சத்தியசந்தனான அவர் பேஷாக என கிளம்பி விட்டார்.
முனிவரிடம் கோபித்த ராமன்
திருமால், ராமாவதாரம் எடுத்ததன் நோக்கமே, ரிஷிகளுக்கு தரிசனம் அளிக்கத்தான். அதனால் தான் அவர் காட்டுக்கே போகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார். அந்த முனிவர்களிலும் ஒருவர் ராமனை டென்ஷனாக்கி விட்டார். சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட பரிவு கொண்டு, இன்று போய் நாளை வா என்றவர், பிதுர் கர்மம் தொடர்பாக தவறாகப் பேசிய ஜாபாலி ரிஷி மீது கோபம் கொண்டார். ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்? என்றார். அப்படி போனதை பார்த்தவர்கள் யாராவது உண்டா? ஒருவர் மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது... என்றார். இதைக் கேட்டு ராமனுக்கு கண்கள் சிவந்து உதடுகள் துடித்தன. மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாகப் பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்! எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம், என்று கடிந்து பேசினார். ஜாபாலி நடுங்கி விட்டார். அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால், உன் வாயால் தெள்ளத்தெளிவாக இந்த வார்த்தைகள் வரட்டுமே என்று தான், உனக்கு கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணிக்கொள்ளாதே, என்றார். ராமன் சமாதானம் ஆனார்.
தாய்லாந்தில் வித்தியாசமான ராமாயணம்: கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமதூதன் அனுமானை பிரம்மச்சாரியாக பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் அவரைத் திருமணமானவராக கூறுகிறார்கள். அந்நாட்டை ஆண்ட நான்காம் ராமன் ராமகியான்என்ற பெயரில் ராமாயணம் எழுதியுள்ளார். அதில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் புதுமையாக இருக்கிறது.சிவலோகத்தில் வாழ்ந்த புஸ்மலி என்பவள், ஒரு சாபத்தால் லவா என்ற நாடாண்ட மன்னன் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சுவர்ணமாலி என்ற தங்கை இருந்தாள். பெண்ணாசை கொண்ட ராவணன் அவர்களைக் கடத்தினான். அவன் உறங்கும் சமயத்தில், அவனிடமிருந்த சுரங்கப்பாதை சாவியைத் திருடிய சகோதரிகள், அந்தப் பாதைவழியே தப்பி தங்கள் நாட்டுக்கு சென்றனர். அவர்களை கற்பிழந்தவர்கள் என சந்தேகித்த தந்தை, ராமதூதன் ஒருவன் வருவான். அவனால் மட்டுமே உங்களுக்கு விமோசனம் தர முடியும், என சொல்லி விரட்டிவிட்டார். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கினர். அனுமன் சீதையை தேடி சென்ற போது, ஒரு வீட்டில் புஸ்மலியைப் பார்த்தார். அவளது அழகால் கவரப்பட்ட அவர், தன் காதலை வெளிப்படுத்தினார். அவள் ஏற்க மறுத்தாள், தான் கண்ணியத்துக்குரிய ராமபிரானின் தூதர் என்பதையும், அவர் சீதாவுக்காக தன்னிடம் தந்திருந்த மோதிரத்தையும் அவளிடம் காட்டியதும், அவள் மகிழ்ந்தாள். ராமதூதனே தனக்கு விமோசனம் தர முடியும் என்பதை அறிந்த அவள் அவரைத் திருமணம் செய்து கொண்டாள். தன் தங்கையைத் தேடிப்பிடித்து அவளையும் திருமணம் செய்ய வேண்டினாள். அனுமன் அவளைக் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டார். அவளிடம் இருந்த சுரங்கச்சாவியைக் கொண்டே அனுமன் ராவணனின் கோட்டைக்குள் எளிதாக புகுந்தார்.
திருப்புட்குழி விஜயராகவன்
பெற்றெடுத்த தந்தைக்கே ஈமச்சடங்குகளைச் செய்ய பலபேர் இன்று தயங்கிறபோது, பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீராமன். எண்ணிறந்த குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பாகும். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம். அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், கொடிய கானகம் சென்றான். தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயமாம். ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டானாம். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம் !
ஜடாயு குண்டம்: வைதீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டம் எனும் பகுதி உள்ளது. இங்குதான் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தகனக் கிரியை செய்தார் என்பது நம்பிக்கை. புல் என்றால், ஜடாயு; ரிக் வேதம்; வேள் முருகன் இந்த மூவரும் வழிபட்டதால் இந்தத் தலத்தை புள்ளிருக்கு வேளூர் என்றும் போற்றுவர். ஜடாயு குண்டத்துக்கு எதிரில் ஸ்ரீராமன், லட்சுமணன் முதலானோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். இந்தக் குண்டத்தில் இருக்கும் சாம்பலைச் சேகரித்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.
வினைகள் தீர்க்கும் வீரராகவர்: சென்னையில் இருந்து சுமார் 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் ஸ்ரீவீரராகவர் எனும் திருநாமத்துடன், பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார். நாபிக்கமல பிரம்மனுக்கு இடக்கையால் பிரணவ தத்துவத்தை உபதேசித்தவாறும், வலக் கரத்தை சாலிஹோத்ர முனிவரின் சிரசில் வைத்து அபயப் பிரதானம் செய்தவாறும் காட்சி தருவது விசேஷம்.
தசரதன் அருள்பெற்ற திருப்புல்லாணி: பூரி ஜெகந்நாதருக்கும் முற்பட்டவர் திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர்; இவர், 72 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றியவராம் ! திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா? நான்கு வேதங்களும் உனக்கு நான்கு பிள்ளைகளாகப் பிறக்கும் என்று தசரதன் அருள்பெற்றதும், சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமருக்குவில் அருளப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்!
வில் ஊன்றிய தலம்: ராமேஸ்வரத்துக்கு அருகில் வில்லூண்டி எனும் தலம் உண்டு. சீதாதேவியின் தாகம் தணிக்க, ஸ்ரீராமன் தரையில் தனது வில்லை ஊன்றி, நன்னீர் பெற்ற திருத்தலம் இது. வில் ஊன்றி என்பதே நாளடைவில் வில்லூண்டி என மருவியதாகச் சொல்கிறார்கள். அருகில் கடல் இருக்க, இந்த இடத்தில் மட்டும் நன்னீர் கிடைப்பது அற்புதமே !
ஸ்ரீராம தீர்த்தம்: ஆந்திர மாநிலம் விஜய நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ராம தீர்த்தம் எனும் தலம். இங்கு கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். ஆனால் அனுமன் இல்லை. ஸ்ரீராமன் அனுமனைச் சந்திப்பதற்கு முந்தைய நிலை இது என்கிறார்கள்.
சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராம சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில், பத்ராசலம் ஸ்ரீராமன் ஆலயமும் ஒன்று. தண்டகாரண்யத்தில், மகாமேரு முனிவரின் மகளான பத்ரா என்பவள், தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. அரசு பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார் என்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் பத்ராசலம் ராமதாஸர். அவரைக் காப்பாற்றும்பொருட்டு, தப்பி லட்சுமணனுடன் வந்து, அந்த தேசத்தை ஆண்ட நவாப்பிடம் கோயில் கட்டியதற்கான தொகையை ஒப்படைத்து ஸ்ரீராமன் அருளாடல் புரிந்த தலம்! நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி, பத்ராசலம் ஸ்ரீராமர், திகழ்வது அற்புதம்!
ராமரின் புகழ்பாடுவோம்
ராமாயணம் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவதார புருஷனாக விளங்கிய ராமபிரானுக்கு தனிக்கோயில்கள் அமைத்து மூலவராக ராமரை வைத்து வழிபடும் பழக்கம் தஞ்சை நாயக்க மன்னர் காலத்தில் பிரபலமான பழக்கமாகும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்விக்கப்பட்ட தலங்களுள் ஏழு தலங்களை சப்தராம ÷க்ஷத்திரங்கள் என்று சொல்வார்கள். தஞ்சையை சோழர் காலத்துக்குப் பின்னால் அரசு புரிந்த பரம்பரை ஒன்று உண்டு. அதை தஞ்சை நாயக்கர் பரம்பரை என்பார்கள். தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களில் செவ்வப்ப நாயக்கர், அச்சு தப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் என்ற மூன்று மன்னர்கள் சிறப்பிடம் பெறுபவர்கள். இம்மூன்று மன்னர்களுக்கும் அமைச்சராக இருந்தவர் கோவிந்த தீட்சிதர். அவரே தென்னாட்டில் ராமர் கோயில்கள் தனியாக அமைய பெரிதும் வழி செய்தவர். கோவிந்த தீட்சிதர் காலத்துக்கு சற்று முன்னாக காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது ஆச்சாரியராக இருந்தார் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் நாம ஜபத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார். கலியுகத்தில் பகவான் நாமாவை உச்சரிப்பதன் மூலம், அதாவது தெய்வத் திருப்பெயரை உள்ளன்புடன் ஓதுவதன்மூலம் எளிதில் மோச்சமடையலாம் என்பது இவர் பரப்பிய கொள்கை. எனவே, இவரை பகவான் நாமபோதேந்திரர் என்று மக்கள் போற்றி அழைக்களானார்கள். இவர் காலத்தில் நாமசித்தாந்தமும், பஜனை மார்க்கமும் பெரும்புகழ் பெற்றமையால் இந்த நாளில் பஜனைகள் செய்யும் பாகவதர்கள் அதன் ஆரம்பத்தில் நாமபோதரை துதித்துவிட்டுத்தான் தொடங்குவார்கள்.
நாமசித்தாந்தம் பெரும் புயலாக புறப்பட்ட அந்த நேரத்தில் ராமநாமாவின் பெருமையை விளக்கும் ராமநாம ரசோதயம், ராம நாம சொயனம் முதலிய வடமொழி நூல்கள் உருவாயின. ராமநாமத்தின் பெருமையைப் பரப்பின. ராமநாமத்தை பலநூறு கோடிகள் உச்சரித்து ராமரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் தியாகராஜர். தஞ்சையிலும் திருவையாறிலும் வாழ்ந்த இந்த மகான் பாடிய கீர்த்தனைகள் ஏராளம். இவை ராமநாமத்தின் மேன்மையை பறைசாற்றக்கூடியது. சங்கீதமும் மூர்த்திகளின் அருட்பணி ஒருபுறம் ராமர் வழிபாட்டைப் பரவலாக்க அதற்கு முன்னாலேயே, சீர்காழி அருணாசல கவிராயர் என்பவர் ராம நாடக கீர்த்தனைகளை இயற்றி ராமர் வழிபாட்டைப் பரவலாக்கினார். இவரை தமிழில் கீர்த்தனங்கள் இயக்கிய தமிழிசை மும்மூர்த்திகளில் ஒருவராகச் சொல்வர். இவர் தியாகய்யருக்கு முற்பட்டவர். விஜய நகர அரசர்கள் காலத்திலும், நாயக்கர் மன்னர்கள் காலத்திலும் ஏராளமான கோயில்களில் ராமர் வழிபாடு பிரசித்தம் பெற்றது. மங்களாசாசனம் செய்யப்பட்ட ஏழு ராமர் திருப்பதிகளோடு, வடுவூர், தில்லைவளாகம் போன்ற தலங்களிலும் ராமர் கோயில்கள் பிரசித்தம் அடைந்தன. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் கால கலைப்பணிக்கு எடுத்துக்காட்டாக கும்பகோணத்தில் ராமசாமி கோயில் உருவாயிற்று. அந்தக் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலிப்பதும், அனுமன் வீணாகான அனுமனாக சித்திரிக்கப்பட்டிருப்பதும் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று வரிசைகளில் ராமாயணம் முழுமையும் ஓவியங்களாக எழுதப்பட்டிருப்பதும் நாம் கண்டு இன்புற வேண்டிய ஒன்றாகும்.
விந்திய மலையில் ஒரு வியப்பு!
வட இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசத்திற்கும் உத்திரப் பிரதேசத்திற்கும் நடுவில் உள்ளது விந்திய மலை. அதிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் மந்தாகினி நதிக்கரையில்தான் ராமாயணகால புண்ணிய ÷க்ஷத்திரமான சித்திரகூடம் அமைந்துள்ளது. வனவாசத்தின்போது, ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் இங்குள்ள காமாக்கிரி மலைமீதுதான் அதிக காலம் தங்கி இருந்தனர். இம்மலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால் இதன்மீது பக்தர்கள் ஏறுவதில்லை கிரிவலம் மட்டுமே வருகிறார்கள். இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் காந்தநாத் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வட இந்திய பாணியில் செதுக்கப்பட்ட ராமர்-சீதை கருங்கல் சிற்பங்கள் அழகிய பெரிய கண்களுடன் நின்ற நிலையில் உள்ளன.
துளசி ராமாயணம் எழுதிய துளசிதாசருக்கு இந்த காந்தநாத் சுவாமி ராமர்-சீதையாக இருமுறை காட்சி அளித்திருக்கிறார். இங்கிருந்து நான்கு கிலோ-மீட்டர் தூரம் சென்றால் மந்தாகினி நதியின் கிளை நதியான யஸ்வினி நதிக்கரையை அடையலாம். இங்கு தான் ராமர் தினமும் நீராடினாராம். இவ்விடம் ராம்காட் எனப்படுகிறது. இதன் அருகிலேயே ஜானகி குண்ட்(ஜானகி குளம்) உள்ளது. இது சீதை நீராடிய இடம். தொடர்ந்து சென்றால் அடர்ந்த காட்டுப் பகுதியில் அத்திரி மகரிஷி அனுசூயா தம்பதியரின் ஆசிரமம் உள்ளது. அனுசூயாவின் கற்பின் சக்தியால் இந்த ஆசிரமத்திற்கே வந்த மந்தாகினி நதி. அங்கேயே இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. தத்தாத்ரேயரின் புதிய அவதாரத்திற்குக் காரணமான- பிரம்மா, விஷ்ணு, சிவன் குழந்தைகளாக்கப்பட்ட சம்பவம் இங்குதான் நிகழ்ந்தது. இந்த ஆசிரமத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரம் சென்றால், உலக அதிசயமாகப் போற்றப்படும் கோதாவரி நதி ஓடும் இரண்டு குகைகளைக் காணலாம். ஒன்று பெரியது. ஒன்று சிறியது. இந்த கோதாவரி யானவள் ராமபிரானின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற விரும்பி ரகசியமாக வந்து அவரை தரிசித்தாள். இதற்கு அடையாளமாக பெரிய கோதாவரி ஓடும் குகைக்குள் ஒரு மேடையில் ராமர், சீதை, லட்சுமணன் காட்சி தரும் சிலைகள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. ராமநவமியன்று சித்திரகூடப் பகுதியிலுள்ள எல்லா ராமர் கோயில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை தரிசித்து புண்ணியமும் மற்ற நலன்களும் பெறுகின்றார்கள்.
ராமர் பாதம்
16-17ம் நூற்றாண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தை பண்டேலா அரச பரம்பரையினர் ஆண்டு வந்தனர். அவர்களது ஆட்சியில் ரஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த ருத்ர பிரதாப் என்பவர் தலைமைத் தளபதியாக இருந்தார். அவர் பெட்வா நதிக்கரையில் இயற்கை வளங்கள் சூழ்ந்த வனப்பகுதியைக் கண்டுபிடித்தார். அந்த பூமியை சமன் செய்து, மக்களைக் குடியமர்த்தி கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டி அந்த இடத்திற்கு அர்ச்சா (மறைந்திருந்த புண்ணிய பூமி) என்று பெயர் வைத்தார். அதோடு பண்டேலா அரச வம்சத்தைச் சேர்ந்த பிர்சிங் ஜுடியோ என்பவரின் இரண்டாவது மகனான டின்மான் ஹார்டுயல் என்பவரை மன்னராக்கி முடி சூட்டினார். தீவிர ராமபக்தரான டின்மான், திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து ஆட்சி நடத்தி வந்தார். ஆனால் இவரது நடத்தையைப்பற்றி சில விஷமிகள் தவறான செய்தி பரப்ப, அதைக் கேட்டு மனமுடைந்த அவர், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக துறவியாகி பண்டல்கண்ட் என்ற கிராமத்தில் ராமர் பாதங்களை ஸ்தாபித்தார். தினமும் ராமபிரானையே துதித்து, அந்த பாதங்களை வணங்கி, சில ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் பாதத்தின் அருகிலேயே உயிர் நீத்தார். இந்தச் சம்பவம் நடந்ததற்கு ஆதாரமான ராமர் பாதத்தையும், அதன் அருகில் டின்மான் ஹார்டுயல் சிலையையும் காணலாம். இன்னும் அவர் சிலையாகவே இருந்து ராமபிரானை துதித்து வாழ்ந்து வருவதாக நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று இந்த ராமர் பாதத்துக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் ராமர் பாத தரிசனம் செய்து, பிரார்த்தனை மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment