Sunday, March 18, 2012

திருநெல்வேலி

திருநெல்வேலி: பேஸ்புக்கில் கலக்கோ கலக்கு என்று கலக்கும் லெஜண்டுகள், நிறைய நட்புகள், நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை நம்மில் பலர் அறிவோம் ( அவர்கள் பற்றி வேறு ஒரு பதிவில்). மட்டுமன்றி, இந்தியாவின் விடுதலைப் போரில், நெல்லை தமிழர்களின் பங்கு மகத்தானது என்பது சரித்திரம். சென்னையிலிருந்து 603 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெல்லை மாவட்டம், அமைப்பு ரீதியாக, கீழ்க்கண்ட சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.

1. சிங்கவால் குரங்கு, புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள் நிறைந்த வளநாடு பிளாக்பக் சரணாலயம்.

2. களக்காடு புலிகள் சரணாலயம்: கூந்தக் குளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்.

3. குற்றாலம் சாரல் விழா: எல்லா வருடமும் ஜூலையில் நடக்கும் குளு குளு விழா.

4. பாவங்களை நாசம் செய்யும் பாபநாசம்:அருவி, டேம், அகத்தியர் பால்ஸ், மனிமுத்தாறு, பாண்தீர்த்தம், மேற்குத் தொடர்ச்சி மலையின், பொதிகை மலையில் அமைந்துள்ளது.

5. கிருஷ்ணாபுரம் சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றது.

6. குறிப்பிடத்தக்கோர்: ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், சுதந்திரப் போராட்ட வீரர்கள் புலித்தேவன், வாஞ்சிநாதன், தமிழ்த் தாத்தா உ.வே.சா., ரா.பி.சேதுப்பிள்ளை, கா.சு. பிள்ளை, பெ.நா.அப்பு சாமி, எழுத்தாளர் புதுமைப்பித்தன், எஸ்.ஜி. கிட்டபா, வித்வான் காரகுறிச்சி அருணாசலம், இப்படி ஒரு பெரிய வரிசை.

7. வழக்கமாக நாம் அனைவரும் அறிந்த நெல்லையின்...அல்வா, அருவா, எலேய் மக்கா, தாமிரபரணி தண்ணி, மாவீரன் கட்ட பொம்மன்.!


மிகச் சரியாக, 104 ஆண்டுகளுக்கு முன்னர், திருநெல்வேலியில், இன்று நடந்த போராட்டமான அந்நியப் பெருட்களை புறக்கணிக்கும், சுதேசி இயக்கங்களின் நிகழ்வு. வீரர்களான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, மகாகவி பாரதியார், தியாகி சுப்ரமண்ய சிவா, ஆகியோரின் சீரிய முயற்சியால் நடந்த போரட்டத்தில், மற்ற அனைத்து தரப்பு மக்களுடன், குதிரை வண்டி ஓட்டுபவர், சலவை செய்வோர் மற்றும் சவரத் தொழிலாளர்களும் இணைந்தவுடன், அனைத்து தொழில்களும் அப்படியே நிறுத்தப்பட்டு ஆங்கிலேய நிர்வாகம் ஸ்தம்பித்தது.!

தாமிரபரணிக் கரையில் நடந்த தியாகி விபின் சந்த்ரபால் விழா, தடை செய்யப்பட்டு, வ.உ.சி முதலானோர் கைது செய்யப்பட்டு, வீரராகவபுரம் (நெல்லைப்பாலம்), இந்துக் கல்லூரி, சி.எம்.எஸ். கல்லூரி, அரசு அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் போன்ற இடங்களில் கலவரம். ஆங்கிலேய அரசு ஏவிவிட்ட அடக்குமுறைக்கு பின் நிலைமை கட்டுக்குள் திரும்பியது என்பவை சரித்திரம்.

இந்திய விடுதலைப் போரில், ஒரு பெரிய திருப்புமுனையாக, சென்னை ராஜதானி மர்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்பட்ட, "திருநெல்வேலி எழுச்சி"க்கு இன்று 104ம் ஆண்டு. வணக்கம் நட்புகளே.

No comments:

Post a Comment