Friday, March 2, 2012

பங்குகள் விற்பனையும் மத்திய அரசின் கிழிந்த சட்டையும்!

-ஏ.கே.கான்

மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் 'அவரசகோல' பொருளாதாரக் கொள்கைக்கு மீண்டும் ஒரு மரண அடி விழுந்துள்ளது.

மத்திய அரசில் அமைச்சகங்களுக்கு இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாததும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

'பொருளாதார சீர்திருத்தப் புலி' என்ற தனது பழைய பெயரை மீண்டும் பெற்று உலக நாடுகளிடையே தனது பெயரை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள துடித்து வருகிறார் பிரதமர். அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளிடமே விவாதிக்காமல் சில்லறை வணிகத்தில் அன்னிய செலாவணி திட்டத்தை அனுமதிக்க முடிவு செய்து, கூட்டணிக் கட்சிகளும் எதிர்க் கட்சிகளும் சேர்ந்து போர்க் கொடி உயர்த்தியதால் அதை அப்படியே கைவிட்டார்.

அதே போல அவர் கொண்டு வர முயன்ற பல நல்ல, கெட்ட பொருளாதார சீர்திருத்த திட்டங்களும் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் பிரதமருக்குள் இருக்கும் சீர்திருத்தவாதி அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்து அவரது தூக்கத்தைக் கெடுப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக பொதுத் துறை பங்குகளை விற்று பல லட்சம் கோடி திரட்டி அதை வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பங்கு விற்பனைக்கான இலக்கு கடந்த பல பட்ஜெட்களிலும் அறிவிக்கப்பட்டாலும், பங்குகளை நினைத்த அளவுக்கு விற்கவும் முடியவில்லை, நிதியைத் திரட்டவும் முடியவில்லை. காரணம்.. கூட்டணி பிளஸ் எதிர்க் கட்சிகள் கூட்டு எதிர்ப்பு, பொருளாதார மந்த நிலை என பல காரணங்கள்.

இந் நிலையில் சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா மாதிரி, இந்த நிதியாண்டு முடிந்து அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் போடப் போகும் நேரத்தில், மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை கழகமான ஓ.என்.ஜி.சியின் பங்குகளை விற்று ரூ. 12,400 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் பட்ஜெட்டில் விழும் ஓட்டையை ஓரளவுக்கு அடைத்து, பற்றாக்குறையை சரி செய்யலாம் என மத்திய அரசு நினைத்திருந்தது.

இதையடுத்து ஓஎன்ஜிசியின் 5 சதவீத பங்குகளை நிதி நிறுவனங்களுக்கு ஏல அடிப்படையில் விற்க நேற்று அதை பங்குச் சந்தையில் ரிலீஸ் செய்தது மத்திய அரசு. ஒரு பங்கின் விலை ரூ.290 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த காலை 9.15 மணிக்கே நிலைமை சரியில்லை என்பது மத்திய அரசுக்குத் தெரிந்துவிட்டது. மானியம் என்ற பெயரில் மத்திய அரசு டீசல், பெட்ரோல், மண்ணெண்ணைக்கு அள்ளிக் கொடுத்து வரும் பணத்தின் பாரத்தை தாங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் ஓஎன்ஜியும் ஒன்று. இப்படி 'பாரம் சுமக்கும்' ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க யார் முன் வருவார்கள்?. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (Foreign institutional investors) அந்தப் பக்கம் திரும்பக் கூட இல்லை. இதனால், காலை முதலே ஓஎன்ஜிசி பங்குகள் விற்பனை படுத்தே கிடந்தன.

மொத்தம் விற்பனைக்கு வந்த 1.44 கோடி பங்குகளில், 3.20 மணி வரை வெறும் 3.4 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. அதாவது, ரூ.12,400 கோடி திரட்டியிருக்க வேண்டிய மத்திய அரசுக்கு கிடைத்த பணம் வெறும் ரூ. 400 கோடி தான்.

இதனால் அதிர்ந்து போன நிதியமைச்சகம் கையைப் பிசைய, பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் முடிவடைந்த பின்னரும் இந்த பங்கு விற்பனை குறித்த விவரத்தை பங்கு சந்தை வெளியிடாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. விற்பனையான பங்குளை சரி பார்த்துக் கொண்டிருப்பதாக பங்குச் சந்தை 'புருடா' விட்டுக் கொண்டு காலத்தை கடத்தியது.

இதையடுத்து நிதியமைச்சகம், ஓஎன்ஜிசி அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கூடி அவசரமாக விவாதித்தனர். 3.30 மணிக்கு பங்குகள் ஏலம் முடிவடைந்த பின்னரும் சுமார் 4 மணி நேரம் இந்த ஆலோசனைகள் நடந்தன.

பங்குகள் விற்காமல் போய்விட்டால் நமது முகத்தில் மண் ஒட்டிவிடும் என்பதால், அதைத் தவிர்க்க மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒரு புதிய தீர்வைக் கண்டது.

அதாவது விற்காமல் போய் மிச்சமிருக்கும் ஓன்ஜிசி பங்குகள் அனைத்தையும் எல்ஐசி நிறுவனத்தின் தலையிலும் சில மத்திய அரசு வங்கிகளின் தலையிலும் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தனர்.

கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்குப் பின்னர், அதாவது இரவு 9 மணிக்கு, எல்லா பங்குகளும் விற்கப்பட்டுவிட்டதாகவும் ரூ. 12,000 கோடி திரப்பட்டுவிட்டதாகவும் ஒரு அறிவிப்பை நிதியமைச்சக அதிகாரிகள் வெளியிட்டனர். ஆனால், ஓஎன்ஜிசி இது குறித்து வாயே திறக்கவில்லை. அதன் முதலீட்டுப் பிரிவு அதிகாரிகள் எல்லோரும் கிட்டத்தட்ட ஓடி ஒளிந்து கொண்டனர்.

இதைவிட இன்னொரு சிரிப்பு வரவழைக்கும் காரணத்தை பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனைக்கான (சரியாக சொன்னால் 'பங்கு விலக்கல் துறை'.. இப்படி ஒரு துறை உலகத்தில் வேறு எங்கும் உண்டா என்று தெரியவில்லை.. இது உருவானது பாஜக ஆட்சியில், அதற்கு 'இன்ஸ்பிரேஷனாக' இருந்தது மன்மோகன்ஜி தான்) கூடுதல் செயலாளர் சித்தார்த் பிரதான் கூறினார். பல பங்குகள் விற்பனையாகியிருந்தாலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது சரியாக பதிவாகவில்லை. இது குறித்து விசாரிக்க சொல்லியிருக்கிறோம் என்றார் பிரதான்.

ஆனால், அப்படி எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை என்றனர் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையின் அதிகாரிகள்.

கிட்டத்தட்ட ரூ. 8,500 கோடி மதிப்புள்ள ஓஎன்ஜியின் பங்குகளை எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளை கட்டாயப்படுத்தி வாங்க வைத்து தனது முகத்தில் மண் ஒட்டினாலும் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டுள்ளது மத்திய அரசு. இதில் சுமார் ரூ. 4,000 கோடி மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஸ்டேட் பேங்க் தலையிலும் கொஞ்சம் பங்குகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், இதற்குப் பெயர் உண்மையிலேயே பங்கு விற்பனையா என்றால் சின்னக் குழந்தை கூட சிரிக்கும். மத்திய அரசின் ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதே மத்திய அரசின் பிற நிறுவனங்கள் வாங்குவது என்பது, நமது இடப் பக்க பாக்கெட்டில் உள்ள காசை, வலது புற பாக்கெட்டில் மாற்றி வைப்பது மாதிரி தான். இதில் நமக்கு என்ன கூடுதலாகக் கிடைத்துவிடப் போகிறது?.

ஆனால், இங்கு ஓஎன்ஜிசியின் பாக்கெட்டை பாதுகாக்க எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளின் பாக்கெட்டை மத்திய அரசு கிழித்துவிட்டது என்பது தான் உண்மை.

நிலைமை இப்படியே போனால், விரைவில் மத்திய அரசின் கதர் சட்டையே கிழிந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்!.

No comments:

Post a Comment