தற்கொலையில் தமிழகம் முதலிடம்- 2010ல் 16,561 பேர் தற்கொலை: இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை!
டெல்லி: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.
சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் 15,916 பேரும், பெங்களூரில் 1,778 பேரும், டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் தங்கள் உயிரை மாயத்துக் கொண்டனர். இந்தியாவில் 1 மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சதவீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தி்ல் கடந்த 1 ஆண்டில் மட்டும் 64,996 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 835 பேர் பலியாகியுள்ளனர். மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதேசத்தில் அதிகமாகியுள்ளது. அங்கு கடந்த ஆண்டில் 3,135 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 414 பேரும், மும்பையில் 194 பேரும், பூனேயில் 91 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தற்கொலை தலைநகர் என்ற பெயரை பெங்களூர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் பெங்களூரில் மட்டும் 1,778 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
No comments:
Post a Comment