அம்பிகையை நாளை மகேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். இவளை மஹதீ என்று அழைப்பர். அளவிட முடியாத பெரும் சக்தியாகவும், சர்வமங்களம் தருபவளாகவும், தர்மத்தின் வடிவமாகவும் இருக்கிறாள். உழவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்களுக்கு கேட்கும்வரம் தருவாள். நாளை மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறாள். மக்கள்நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியான மீனாட்சி, மீன் எப்படி கண்களை இமைக்காமல் முட்டைகளை பார்த்து குஞ்சாக்குகிறதோ அதுபோல, தன் அருள்பார்வையால் உயிர்களை நல்வழிப்படுத்துகிறாள். அதனால், மீன் போன்ற கண்களை உடையவள் என்னும் பொருளில் மீனாட்சி, கயற்கண்ணி என்ற பெயர்களோடு விளங்குகிறாள். அவள் ஆளும் நகரமும் தூங்கா நகரமாக உள்ளது. மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சி வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் ஆகிய வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தாள். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதியும், மனத்துணிவும் அவளின் இயல்பாக இருந்தன. ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்னும் விதத்தில் பாண்டியனும், தன் மகளுக்கு பட்டம் சூட்டி அழகு பார்த்தான். நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் அம்பிகை, அதே கோலத்தில் நம் கண்களுக்கு விருந்தளிக்கிறாள். சிம்மாசனத்தில் அமர்ந்து கிரீடம்,ஆபரணங்கள், செங்கோல் ஏந்தி காட்சி தருகிறாள். நாளை பட்டம் சூடும் பட்டத்துராணி மீனாட்சியின் பார்வை நம்மீது பட்டாலே, நம் வாழ்வில் வெற்றி உண்டாகும்.
நைவேத்யம்: கல்கண்டு சாதம்
பாட வேண்டிய பாடல்:
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே! மதுகரம் வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்
இளவஞ்சிக் கொடியே! வருகவே!
மலையத்துவசன் பெற்ற
பெருவாழ்வே! வருக வருகவே!
No comments:
Post a Comment