அம்பாளை பிராஹ்மியாக அலங்கரிக்க வேண்டும். கையில் ஏடும், நெற்றியில் கண்ணும் இருக்க வேண்டும். இவள் சரஸ்வதியின் அம்சம் ஆவாள். வீடுகளில் மஞ்சளில் செய்த முகத்தை, வீணை, ஏடு, ஜபமாலையுடன் அலங்கரிக்க வேண்டும். இது முடியாதவர்கள், ஒரு மேஜையில் புத்தகங்களை அடுக்கி, அதன் மேல் சரஸ்வதி படம் வைத்தும் வணங்கலாம். மதுரை மீனாட்சியம்மன் நாளை சிவபூஜை அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள். ஒருவன் அறிவு பெற்றதன் அடையாளமே அவன் கடவுளின் திருவடியை வணங்குவது தான் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அந்த நல்வழியை நமக்கு எடுத்துக் காட்டும் விதமாக மீனாட்சி சிவபூஜை செய்து வருகிறாள்.
அன்பே சிவம் என்று திருமந்திரம் இறைவனைப் போற்றுகிறது. அருளின் வடிவம் அம்பிகை. அருள் அன்பை பூஜிக்கும் ஆனந்த காட்சியே நாளைய அலங்காரமாகிறது. மீனாட்சிக்கு சுவாமியை விட முதன்மை கொடுப்பர். கணவன் தன் மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, நல்ல முறையில் பார்த்துக் கொண்டால் அவள் கணவனைத் தெய்வமெனக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் தத்துவம் இதில் வெளிப்படுகிறது. நேற்றைய பொழுதில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தேவியை தரிசித்தவர்கள், சிவபூஜையையும் தரிசிக்க வேண்டும் என்பது நியதி. நாளை மீனாட்சியன்னையின் சிவபூஜையைத் தரிசித்து சிவபுண்ணியம் பெறுங்கள்.
நைவேத்யம்: பால்பாயாசம், சுண்டல், பொரி, அவல்
பாடவேண்டிய பாடல்:
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும்
அன்பர் கண்ணும் கருத்தும்
நிறைந்தாய் சகலகலாவல்லியே.
No comments:
Post a Comment