விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வழிபடவேண்டும். வெற்றிக்குரிய நாளான விஜயதசமி கல்வி, கலைகளைப் பயிலத் தொடங்குவதற்குரிய நாளாகும். நாளை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணைக் கச்சேரி நடைபெறுகிறது. அருளாளர்கள் இறைவனை நாத வடிவமாகப் போற்றுவர். தேவாரம் இறைவன்,ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பதாகப் போற்றுகிறது. வடமொழியில் கலா என்றும், தமிழில் கல்வி என்றும், ஆங்கிலத்தில் கல்ச்சர் என்றும் சொல்லும் எல்லாவற்றுக்கும் மூலம் ஒன்றே. கலை அகில உலகத்திற்கும் பொதுவானது. பிறை நிலவு வளர்வது போல கலையும் முடிவில்லாமல் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. கலைமகள் சரஸ்வதியும் இடைவிடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறாள் என்பதன் குறியீடே வீணையாகும். இசை மட்டுமல்லாமல், ஓவியம், நாட்டியம், சிற்பம், காவியம், தியாகம்,சேவை, தானம் என்று அனைத்தும் கலைக்குள்ளே சங்கமிக்கின்றன.
இந்த உயர்வான பண்புகளின் முடிவான நோக்கம் அன்பில் தோய்வது தான். அந்த அன்பே கடவுளாக வீற்றிருக்கிறார். அன்பே சிவம் என்று இதைத் தான் சொல்கிறார்கள். இறைவனின் திருவடிகளைப் போற்றும் திருநாவுக்கரசர், மாசில் வீணையும், மாலை மதியமும்... என்று வீணையின் இனிமையை நமக்கு காட்டுகிறார். சரஸ்வதியும் தன் வீணா கானத்தால் பரமேஸ்வரரின் லீலைகளைப் போற்றிப் பாடுவதாக சவுந்தர்யலஹரி குறிப்பிடுகிறது. அதனால், இறையருளைப் பெறும் சாதனமாக இசை இருக்கவேண்டும். பொழுதுபோக்கு என்பது கலையின் இரண்டாவது அம்சம் தான். பாடுபவரோடு கேட்பவரும் இறையருளுக்குப் பாத்திரமாக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு. அப்படி பெருமை மிக்க இசையால் நாளை ஆராதிக்கின்றனர். மீனாட்சியம்மன் கோயிலில் நாளை 108 வீணை வழிபாட்டில் கலந்து மகிழுங்கள்.
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
பாட வேண்டிய பாடல்:
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.
No comments:
Post a Comment