Wednesday, June 15, 2011

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம்

டெல்லி: உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

இந்த வரிசையில், 4வது இடத்தில் இந்தியாவும், 5வது இடத்தில் சோமாலியாவும் உள்ளன.

பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம்.

2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக விளங்குகிறது.

No comments:

Post a Comment