Wednesday, June 15, 2011

முதுகுவலி வராமல் இருக்க - 2

7. தூங்கும்போது...

(அ) மென்மையான, புதையும் தன்மை கொண்ட மெத்தையில் படுக்காதீர்கள். கடினமான ஒரு படுக்கை அல்லது கடினமான பலகை உள்ள கட்டிலின் மேல் விரிப்பு விரித்துப் படுங்கள்.

(ஆ) உங்கள் படுக்கை முதுகிற்கு நல்ல சார்பு தருவதாகவும், முதுகெலும்பை நேர்நிலையில் வைக்க உதவுவதாகவும் அமையவேண்டும்.

(இ) ஒருப‌‌‌க்கமாகப் படுக்கும்போது முழங்கால்கள் நேர்கோணத்தில் அமையும்படி விழிப்பாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

(ஈ) கவிழ்ந்து படுப்பது சரியல்ல.

8. பொருள்களைத் தூக்கும்போதோ உயர்த்தி எடுக்கும்போதோ...

(அ) முழங்காலை வளையுங்கள். முதுகை அல்ல.

(ஆ) பயணத்துக்குச் சுலபம் என்று ஒரே சூட்கேஸில் அடைக்காதீர்கள். இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட் கேஸில் கொண்டு செல்லுங்கள். இரண்டையும் இருகரங்களால் தூக்கும்போது சம எடைப் பங்கீடு வரும். முதுகுத் தசைகளுக்கும் சம வேலை கிட்டும்.

(இ) முதுகுத் தசைகளை அதிக உபத்திரவம் செய்யாத வகையில் பொருள்களை உயர்த்தி வைக்கும்போது ஏணியில் படிப்படியாக வைத்து ஏற்றுங்கள்.

9. கார் ஓட்டும்போது...

(அ) உங்கள் கீழ் முதுகுக்கு சார்ந்து கொள்ள ஒரு குஷன் உபயோகியுங்கள். இடைவெளி விட்டு விட்டு காரை நிறுத்தி இறங்கி நின்று பின்பு தொடருங்கள்.

10. ஹீல் வைத்த காலணிகளை அணியாதீர்கள். தட்டையாக உள்ள காலணியையே அணியுங்கள்.

11. உங்கள் எடை அதிகமாக இருந்தால் குறைத்துவிடுங்கள்.

12. டைவ் அடித்தல், பல்டி அடித்தல் போன்ற செயல்கள் கூடாது.

13. கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை வாங்கி நீங்களே சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி!

தசை இயங்கு நிலைக்கு தேகப்பயிற்சி அவசியம். முதுகெலும்பை நல்ல நிலைக்கு வைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

உங்கள் மருத்துவரின் அனுமதி பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வேகமாக நடத்தல், நீச்சல், கைகால்களை மென்மையாக நீட்டி மடக்கல் நல்ல பயிற்சிகளாகும்.

எந்தப் பயிற்சியையும் நிதானமாகவும் படிப்படியாகவும் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment