சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நிதிக் கழகத்தின் (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாண வம்சாவளித் தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் நியமித்தார் அந் நாட்டு பிரதமர் லீ சென் லூங்.
அந் நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான சண்முகரட்னம் நேற்று தான் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் (Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் இவரை சர்வதேச நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பான்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஐஎம்எப் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதி்த்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
இப்போது சண்முகரட்னம் ஐஎம்எப்பின் ஸ்டீரிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment