Tuesday, May 10, 2011

ஸ்கைப்பை வாங்க முயற்சிக்கும் கூகுள், பேஸ்புக்!!



தொலைபேசி இல்லாமல் இணையதளம் மூலம் பேச, சாட் செய்து கொள்ள வசதி செய்து தரும் ஸ்கைப் தளத்தை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள்.

ஸ்கைப்பை வாங்குவது குறித்து தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஸுகர்பர்க் பங்கேற்றதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த டீலில் தன்னுடன் லக்சம்பர்க்கைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள ஸுகர்பர்க் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் ஸ்கைப்பை தன்வசப்படுத்த கூகுள் நிறுவனமும் கடும் முயற்சி செய்து வருகிறது.

ஸ்கைப்பின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகையை கொடுத்து வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டுமே தயாராக உள்ளன.

ஆனால், இதற்கான பேச்சுக்கள் இப்போதுதான் முதல்கட்டத்தில் இருப்பதாகவும், பொருத்தமான நேரத்தில் இந்த டீல் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் ஸ்கைப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2003-ல் ஆரம்பிக்கப்பட்டது ஸ்கைப். 2005-ல் 3.1 பில்லியன் டாலர் கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்கியது இபே. 2009-ல் ஸ்கைப்பிலிருந்த தனது பெரும்பான்மைப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனத்துக்கு விற்றது இபே. ஆனால் இப்போதும் மூன்றில் ஒரு அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது இபே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 1 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய பங்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தது ஸ்கைப். ஆனால் இந்த முயற்சி தாமதமாகி வருவதால், நிறுவனம் கைமாறுவது குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன.

கூகுள் ஏற்கெனவே கூகுள் வாய்ஸ் என்ற நிறுவனத்தை தன்வசம் வைத்துள்ளது. ஸ்கைப் செய்யும் சேவையைத்தான் கூகுள் வாய்ஸும் செய்கிறது. எனவே பேஸ்புக் நிறுவனத்திடம் ஸ்கைப் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment