கோவை: ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.
சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்).
மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குறித்து, "சென்' குழுவைச் சேர்ந்த சோமன், தனலட்சுமி, ஆனந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது: கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை மொழிகளை கம்ப்யூட்டருக்குள் புகுத்தும் முயற்சி நடக்கிறது. அந்தந்த நாட்டு மொழிகளில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் இயற்கை மொழி ஆய்வில் 2007ல் இருந்து ஈடுபட்டுள்ளோம். கம்ப்யூட்டர் மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழியியல் கருவி, துவக்கநிலை மொழிப்பெயர்பு சாதனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கலாம். தமிழ் சொல்வகை அடையாளப்படுத்தி, தொடர் பகுப்பான், உருபனியல் பகுப்பாய்வி போன்ற சாப்ட்வேர் மூலம் ஆங்கில சொற்றொடர்கள், வார்த்தை, பால்விகுதி, காலம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எந்த வினைச்சொல்லாக இருந்தாலும், எப்போது, எந்த பால் விகுதியை குறிக்கும் என கணித்து மொழிபெயர்க்கப்படும்.
வார்த்தைகளில் குறில், நெடில், வினை, மாத்திரை போன்ற அடிப்படை இலக்கணத்தையும் அடையாளம் காட்டும். எனவே, ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் உட்பட பலரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எளிதாக தமிழில் மொழிப்பெயர்க்கலாம். ஆசிரியர்கள் உதவியின்றி இலக்கணத்தை கூட கற்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தி மொழியிலும் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது; அடுத்தடுத்து பிற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கப்படும். ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை கூட அந்தந்த மொழிகளில் எளிதாக மொழிப்பெயர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment