டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் (ஜேபிசி) அதிமுக உள்பட 20 கட்சிகளுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.
ஜேபிசி அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் அறிவித்தார். இதையடுத்து இதுதொடர்பான தீர்மானம் நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படவுள்ளது. அது நிறைவேற்றப்பட்டவுடன், ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் ஜேபிசி அமைக்கப்படும்.
தற்போதைய விதிமுறைப்படி ஜேபிசியில் 21 உறுப்பினர்கள் வரை இடம் பெறலாம். ஆனால் அதை 30 பேராக உயர்த்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்காது என்று தெரிகிறது.
21 பேரில் 14 பேர் லோக்சபாவைச் சேர்ந்தவர்களாகவும், 7 பேர் ராஜ்யசபாவைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
தற்போது நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 37 கட்சிகளுக்குப் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் உறுப்பினர் வாய்ப்பு கிடைத்து விடாது. கட்சிகளின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான் உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில் பார்த்தால், காங்கிரஸ், பாஜக, திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்தக் கட்சிகளில் காங்கிரஸ் தவிர, திமுக, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் ஆகியவை காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவையாகும். அதாவது மொத்தம் உள்ள 7 கட்சிகளில் நான்கு கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள். மற்ற 3 பேரும் எதிர்க்கட்சியினர். அவர்களிலும், சமாஜ்வாடி கட்சியை ஏதாவது ஒரு வகையில் காங்கிரஸ் தனக்கு சாதகமாக வளைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த ஜேபிசி குழுவின் விசாரணையால் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.
அடுத்து ஜேபிசியின் தலைவராக சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு மிக மிக பாத்திரமான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பி.சி. சாக்கோ நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர், தீவிர சோனியா விசுவாசி. எனவே இவரையே தலைவராக நியமிக்க சோனியா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே எதற்கும் பாதகம் இல்லாத வகையில், இவர் செயல்படலாம் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.
ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், ஜேபிசி அமைக்கப்பட்டு அதன் தலைவர், உறுப்பினர்கள் விவரம் தெரிய வரும்.
No comments:
Post a Comment