Friday, June 24, 2011

சனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர்!


வாஷிங்டன்: சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்கிளேடஸில் உப்பு நீர் (liquid salt water ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய கேசினி விண்கலம், இந்த நிலவிலிருந்து வெளியேறும் துகள்களை கைப்பற்றிய கேசினி விண்கலம், அதை Cosmic Dust Analyser கருவி மூலம் ஆராய்ந்து உப்பு நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சனி கிரகத்திற்கு 19 நிலவுகள் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது. (இன்னும் கூட பல நிலவுகள் இருக்கலாம்). அதில் என்கிளேடஸ் நிலவிலிருந்து நீர்த் துகள்கள் வெளியேறுவதை கேசினி விண்கலம் 2005ம் ஆண்டில் கண்டுபிடித்தது.

இந்த துகள்கள் சனி கிரகத்தை சுற்றி ஒரு வளையத்தையே ஏற்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. சனி கிரகத்தைச் சுற்றி ஏராளமான வளையங்கள் உண்டு. அதில் ஒரு வளையம் உருவாக இந்த நீர்த் துகள்கள் காரணமாகியுள்ளன.

இதையடுத்து 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கேசினியை இந்த நிலவை நோக்கித் திருப்பியது நாஸா. இந்த நிலவை மிக நெருக்கமாக நெருங்கிச் சென்ற கேசினி விண்கலம் அதிலிருந்து வெளியேறும் துகள்களை டஸ்ட் அனலைசர் மூலம் ஆராய்ந்தது.

அதன்முலம் கிடைத்த விவரங்களை இரு ஆண்டுகளாக ஆய்வு செய்த நாஸா, இந்த நிலவிலிருந்து உப்பு நீர் வெளியேறுவதை உறுதி செய்துள்ளது. சூரியனிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இந்த நிலவிலிருந்து வெளியேறும் நீர் உடனடியாக பனிக் கட்டிகளாக மாறி சனி கிரகத்தை சுற்றி வரும் கோடிக்கணக்கான துகள்களில் ஒன்றாக இணைந்து வளையமாக மாறிவிடுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரினால்ட் புளூயன்ஸ் கார் நன்கொடை



திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரினால்ட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய ரினால்ட் கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மஹிந்திராவுடன் கூட்டை முறித்துக்கொண்ட பிரான்சை சேர்ந்த ரினால்ட் கார் நிறுவனம் இந்திய சந்தையில் தனித்து களமிறங்கியுள்ளது.

தனது முதல் அறிமுகமாக புத்தம் புதிய புளூயன்ஸ் செடான் சொகுசு காரை சமீபத்தில் இந்திய சந்தையில் களமிறக்கியது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் அமோக வெற்றி பெறுவதற்கு ஏழுமலையானின் அருள் கிடைக்க வேண்டி, அந்த நிறுவனம் புத்தம் புதிய புளூயன்ஸ் காரை திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஆந்தி்ர பிரதேச பிஜேபி செய்திதொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ரெட்டியிடம் கார் சாவியை ஒப்படைத்தார்.

இந்த கார் ரூ.15 லட்சம் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Jun 22, 2011 4 Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி

வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி காலதாமாதபடுத்த விரும்பவில்லை இந்த பதிவை பற்றி அதிகம் எழுதபோவதில்லை நீங்களே இதை உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.

என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.



என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்



என்றும் அன்புடன்
வெங்கடேஷ்

Wednesday, June 15, 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.


பதினாறு பேறுகள்

கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு.

இந்த பேறுகள் கிடைக்கப் பெற்றவர்கள் எவராயினும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வது உறுதி.

அபிராமி பட்டர் கேட்கும் வரங்கள்

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

அந்த பதிகம்:

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!

இந்தப் பதிகத்தில் ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார்.

தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப் பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை.

தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி, குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது. கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன அவன் சமூகத்திலிருந்து கேட்பது.

தொலையாத நிதி, கோணாத கோல்

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும்.

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும், அதன்படி அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ அருளியதற்கு அம்பிகையை போற்றுகிறார்.

இன்னல் தீர கொண்டாடுவோம் ராம நவமி

மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம்.


பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். செவ்வாய்கிழமை தினத்தன்று இந்தியா முழுவதும் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் ராமனின் பெருமைகளை அறிந்து கொள்வோம்.

தர்மம் காக்க அவதரித்த ராமன்

தர்மம் அழிந்து, அதர்மம் தலை எடுக்கும் போதெல்லாம் மண்ணுலகையும், மக்களையும் காக்க மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள். இதில் ஏழாவதாக எடுத்த ராம அவதாரம் மனித அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முந்தைய அவதாரங்களான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் வாமனர், பரசுராமர் ஆகியவை, நீர்வாழ்வனவாகவும், விலங்காகவும், விலங்கும், மனிதனும் இணைந்தும் காணப்படும். இந்த ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து அதன் மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்.

அவதார சிறப்புகள்

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன், சீதாதேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக இருந்தார். தந்தை செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார். அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களை காத்தார். இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இதில் ராம அவதாரத்தைப் பற்றியும், அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

ராம நவமி கொண்டாட்டம்

அவதார நாயகன் உதித்த நாளை, ஸ்ரீராம நவமி விழாவாக ஆண்டு தோறும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.

நீர்மோர், பானகம்

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷே கப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ராம நாமத்தின் மகிமை

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணை யானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வ தும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டு கிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்.

வெளிநாட்டு விமான சேவையை ஆரம்பிக்கிறது இன்டிகோ!

டெல்லி: இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, வரும் செப்டம்பர் முதல் வெளிநாட்டு சேவையை தொடங்குகிறது.

முதல் கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி டெல்லி - துபாய் சேவையையும், செப்டம்பர் 15-ம் தேதி டெல்லி- பாங்காக் மற்றும் அக்டோபர் 2-ல் டெல்லி - சிங்கப்பூர் சேவையையும் இந்த நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

"இந்த மூன்று மார்கங்களில் பயணிப்போரிடம் கட்டண வித்தியாசம் காட்டாமல், ஒரே கட்டணத்தை வசூலிக்கிறது இன்டிகோ என்பதுதான் ஸ்பெஷல். டெல்லியிருந்து, துபாய், சிங்கப்பூர் அல்லது பாங்காக் என எந்த ரூட்டில் போனாலும் கட்டணம் ரூ 9999 மட்டும்தான்," என்கிறார் இன்டிகோ தலைவர் ஆதித்ய கோஷ்.

இந்த சலுகைக் கட்டணம் முதல் 25000 இருக்கைகளுக்கு தரப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1டி மற்றும் 1 சியிலிருந்து இன்டிகோ சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்.

அடுத்த ஆண்டு கொல்கத்தாவிலிருந்து டாகா மற்றும் பாங்காக்கு புதிய விமானங்களை இயக்குவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இன்னும் விமான சேவை துவங்கப்படாத 34 சதவீத செக்டார்களில் புதிய சேவையைத் தொடங்கவும் இன்டிகோ முடிவு செய்துள்ளது.

2006-ல் சேவையைத் துவங்கிய இன்டிகோ, 39 விமானங்களுடன் இந்தியாவின் 26 நகரங்களுக்கிடையே இயங்கி வருகிறது. நாளொன்று 250 விமான சேவைகளைத் தரும் இந்த நிறுவனம், வரும் 2015-க்குள் 100 ஏர்பஸ்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம்

டெல்லி: உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

பெண் சிசுக் கொலை, குழந்தைகள் கடத்தல் உள்ளிட்டவை இந்தியாவில் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக நடத்தப்பட்ட சர்வேயில்.

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.

இந்த வரிசையில், 4வது இடத்தில் இந்தியாவும், 5வது இடத்தில் சோமாலியாவும் உள்ளன.

பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வ தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தர வரிசைப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 3 நாடுகள் தெற்காசியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் கொடுமைகள், சுகாதார சீர்கேடு, பாலியல் அல்லாத கொடுமைகள், கலாச்சார ரீதியிலான சித்திரவதைப் பழக்கவழக்கங்கள், மதம் அல்லது பாரம்பரியம் சார்ந்த பெண்களுக்கு எதிரான பழக்க வழக்கங்கள், கடத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நாடுகள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை பெண் சிசுக் கொலை, சிசுக் கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம்.

2009ம் ஆண்டு இந்தியாவில் 1 கோடி பேர் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தா கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் 2009ம் ஆண்டு நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவீதம் இந்தியாவுக்குள் நடந்தவையாகும். மீதமுள்ள 10 சதவீதம் வெளிநாட்டுக் கடத்தல் சம்பவங்களாகும். மேலும் இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கட்டாயத் திருமணங்களும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாக விளங்குகிறது.