Monday, December 24, 2012

திருப்பாவை - திருவெம்பாவை - 5

திருப்பாவை
5. மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்: பாற் கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை என்ன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோர் புகழும்படி செய்த தாமோதரன்.
அப்படிப்பட்ட அந்தப் பெருமாளை நாம் தூய மனதுடன், நல் மலர்கள் தூவி வாழ்த்தி வணங்குவோம், மனதால் அவனை நினைப்போம்.
காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரக் காத்திருக்கும் பிழைகளும் கூட தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கிப் போய் விடும். ஆகவே, அந்த தூய பெருமானின் புகழ் பாடுவோம், அவன் குறித்தே பேசுவோம்..
--
திருவெம்பாவை
5. மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அறியான்
கோலமும் நமமை ஆட் கொண்டு அருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே! சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்!

பொருள்: மலை போல நீண்ட நெடிய திருமேனியை உடைய இறைவன், திருமாலால் கூட அறிய முடியாத திருவடிகளை உடையவன். ஆனால் அப்பேற்பட்டவனையே நம்மால் அறிய முடியும் என்பது போல பேசுகிறாய் நீ.
உனது பேச்சு பிறரை மயங்க வைத்து விடும் மாயப் பேச்சு. அப்படி அனைவரும் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!
உனக்கு ஒன்று தெரியுமா.. ? எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினர் யாராலும் அறிய முடியாத அருமைக்கும், பெருமைக்கும் உரியவன். நம்மைப் போன்ற சிறியவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் மன்னிக்கும் அருட் குணம் கொண்டவன்.
தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! அப்படிப்பட்ட பரமனை, சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உன் வாசல் வந்து பாடுகின்றோம். அந்தக் குரல் உனக்குக் கேட்கவில்லையா..?
மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுதான் உன் தன்மையா.?

No comments:

Post a Comment