திருப்பாவை
3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: வாமனன் ரூபத்தில் தனது ஓரடியால் உலகத்தை அளந்த அந்த திருமாலின்
பெயரைச் சொல்லி நாம் புகழ் பாடுவோம். அப்படிப் பாடுவதால் நமக்குக்
கிடைக்கும் பலன் என்ன தெரியுமா...
மாதம் மும்மாரி மழை பெய்யும். செந்நெல் வயல்களில் பயிர்கள் வளரும், அதன்
ஊடாக மீன்கள் துள்ளித் திரியும். நீல் நிலைகளில் குவளை மலர்கள் பூத்துக்
குலுங்கும். அதன் மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும்,
வள்ளல் பசுக்களோ தங்கள் மடியிலிருந்து பாலை அருவியாகப் பொழியும். என்றும்
நீங்காத செல்வம் நமக்குக் கிடைத்திடும் பெண்ணே.
திருவெம்பாவை
3. முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன்
என்றள்ளூறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
பொருள்:
எழுப்புபவள்: முத்துப் பற்களை உடையவளே, முன்பு நீ எங்களுக்கு முன்பாக வந்து
எங்களை எழுப்பி, அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாய் இனிக்க இனிக்க
இறைவனைப் புகழ்ந்து பேசுவாய். ஆனால் இப்போதோ, இப்படி படுக்கையில்
கிடப்பதேன்.
உறங்குபவள்: நீங்கள் இறைப் பற்று உடையவர்கள். அந்த இறைவனின் அடியார்கள்.
நான் ஒரு புதிய அடிமை.எனது செயலை நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..
எழுப்புபவள்: உனது அன்பை நாங்கள் அறிவோம் பெண்ணே. இப்படிப்பட்ட அழகிய மனம்
உடையவர்கள் எம்பெருமான் சிவபெருமானின் புகழ் பாடாமலிருக்கலாமோ? நீயும்
வந்து அவன் புகழ் பாடு
No comments:
Post a Comment