திருப்பாவை:
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
பொருள்: மாதங்களில் சிறந்த மார்கழியில், மதி நிறைந்த நன்னாளில், கோவிந்தன்
பெயரைச் சொல்லி, குளித்து நீராடுவோம் ஆயர்பாடி பெண்களே. நந்தகோபன்
மாளிகையாகி விட்ட வடபத்ரசாமி பெருமாளுடைய கோவிலில், அந்தப் பெருமாள் நம்
கண்களுக்கு கண்ணனாகவே காட்சி தருகிறான்.
நந்தகோபன் திருமகனாம், யசோதை பெற்ற இளஞ்சிங்கமாம், அந்த கார்மேனிக் கண்ணன்,
முழுமதியின் முகமுடையான் நாராயணனே என் கண்ணன். நம்மைப் போன்ற இளம்
பெண்களின் விருப்பத்தை அந்த செங்கண் படைத்த கண்ணனே நிறைவேற்றுவான். அவனிடம்
உங்களது கோரிக்கைகளை வையுங்கள். அந்தப் பார் புகழும் கார் வண்ணனின்
புகழைப் பாடி உலகத்தோர் போற்றும் வண்ணம் இந்த மார்கழி நீராடுவோம்.
திருவெம்பாவை:
1. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்!
பொருள்: திருவண்ணாமலையில் அருள் பாலிக்கும் சிவபெருமான் ஆதியும், அந்தமும்
இல்லாதவர். அடியும், முடியும் காண முடியாத பிழம்பு அவர். அருட்பெரும்
ஜோதியாய் நின்றவர். அத்தகைய சிறப்பு பெற்ற ஈசனின் அடியைப் போற்றி போற்றி
என்று பாடுகிறோம். அப்படிப் பாடுவதைக் கேட்டும் நீ தூங்கிக்
கொண்டிருக்கிறாயே, உனக்கு காதுகளே இல்லையா அல்லது செவிடா...?
நாங்கள் எம்பெருமானைப் பாடிப் புகழ்வதைக் கேட்டு ஆங்கே ஒருத்தி விம்மி
விம்மி மெய்மறந்து அழுவது உனக்குக் கேட்கவில்லையா. நீயோ தூக்கத்திலிருந்து
எழாமல் கிடக்கிறாய், அவளோ ஈசனின் புகழ் பாடும் பாடலைக் கேட்டு
மூர்ச்சையாகிக் கிடக்கிறாள். இது என்ன விந்தை!
No comments:
Post a Comment