-ஏ.கே.கான்
ஜெனீவா: உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் Big Bang எனப்படும் மாபெரும் வெடிப்பின்போது என்ன நடந்திருக்கும் என்பது குறித்த சோதனையில் நேற்று மிக முக்கியமான நாள்.
ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையத்தில் புரோட்டான்களின் 'அதிவேக அடிதடி' ஆரம்பமாகியுள்ளது.
பல டிரில்லியன் புரோட்டான்களை 7 TeV (7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்) வேகத்தில் மோதவிட்டால் என்ன நடக்கும் என்பதை சோதிக்கவே இந்த மையம் அமைக்கப்பட்டது.
அதாவது 27 கி.மீ. தூர வட்டப் பாதையில், (உள்ளே எந்த வாயுக்களும் இல்லாத ஒரு வெற்றுப் பாதை இது. உள்ளே உள்ள அழுத்தம் நிலவில் உள்ள அழுத்தத்தில் 10ல் 1 பங்கு தான்), இரு புரோட்டான் கதிர்களை எதிரெதிர் திசையில் வினாடிக்கு 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் வேகத்தில் மோதவிட்டுள்ளனர்.
இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இந்த 27 கி.மீ. பாதையை புரோட்டான் கதிர்கள் வினாடிக்கு 11,245 முறை சுற்றி வந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
இதன்மூலம் இந்தக் கதிர்களில் உள்ள புரோட்டான்கள் வினாடிக்கு 600 மில்லியன் முறை மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. ஒளியின் வேகத்தில் 99.99% அளவுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி மோதி சிதற ஆரம்பித்துள்ளன.
கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டு வந்த இந்த Large Hadron Collider பல்வேறு தடைகள், கோளாறுகளை எல்லாம் தாண்டி நேற்றுத்தான் தனது முழு வேகமான 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸை எட்டியுள்ளது.
இந்த 27 கி.மீ LHCயை உலகின் மிகப் பெரிய பிரிட்ஜ் என்றும் சொல்லலாம். காரணம், அதன் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயுவைக் கொண்டு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
எதற்கு இவ்வளவு குளி்ர்ச்சி என்கிறீர்களா?.. புரோட்டான்கள் மோதும்போது உள்ளே சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை.
புரோட்டான் கதிர்களை இந்த வேகத்தில் ஓட வைக்க 9300 மின் காந்தங்களைத் தான் பயன்படுத்துகின்றனர். மின்சாரம் பாய்வதால் காந்தங்கள் சூடு பிடித்துவிடாமல் இருக்க அவை குளிரூட்டப்பட்டே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காந்தங்களின் வெப்ப நிலை -193.2°C.
இந்த சோதனையையே ஏன் இந்த வெட்டி வேலை என்று சிலர் கேட்கலாம்.
காரணம் இருக்கிறது.. இந்த பிரபஞ்சம், அண்ட சராசரங்கள் உருவானது என்பதை கண்டறியும் முயற்சி தான் இந்த சோதனை.
ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது.
இதைத் தவிர Higgs Boson என்றொரு துகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று புரோட்டான்கள் சிதறும். அப்படியே Higgs Boson துகளும் நம் கண்களுக்குத் தட்டுப்பட்டுவிடும் என்று நம்பித்தான் இந்த சோதனையை நடத்துகிறார்கள்.
இந்த Higgs Boson இதுவரை எந்த அறிவியல் சோதனைகளிலும் சிக்காத ஒன்று. இதனால் இதை 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள்.
வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத 'dark matter' தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது.
அது என்ன என்பதை அறிய பிரபஞ்சத்துக்குள் போய் பார்க்க வேண்டியதில்லை.. அணுவைக் குடைந்து.. அதனுள் உள்ள சிறிய துகளையும் குடைந்து பார்த்தால் முடியும் என்று நம்பி இந்த சோதனை நடத்தப்படுகிறது.
இந்த LHCல் வைத்து புரோட்டான்களை உடைக்கும் சோதனை ஆரம்பித்தது 2008ம் ஆண்டு இறுதியில். ஆனால், இந்த சோதனை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அந்த எந்திரத்தில் ஏராளமான கோளாறுகள். அதையெல்லாம் சரி செய்யே 1 வருடம் ஆகிவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் LHC மீண்டும் இயங்க ஆரம்பித்தது. நேற்று தனது முழு வேகத்தை எட்டிப் பிடித்தது.
இது பல்லாண்டுகள் நீடிக்கும் சோதனை.. இது கடவுளின் அணுத் துகளை வெளியே கொண்டு வரலாம் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத ஏதாவது ஒன்றையும் வெளிக் கொண்டு வரலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment