Wednesday, December 28, 2011

திருப்பாவை 12. ராகவனைப் பாட எழுப்புதல்

Lord Krishna

திருப்பாவை 12. ராகவனைப் பாட எழுப்புதல்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனதுக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே!

மார்கழி மாதத்து பனி எங்கள் தலையின் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய ராவணனை கோபத்தினால் அழித்த ராமபிரானை, ராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை அனைவரும் வாயாறப் பாடுகின்றோம்.

அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக் கிடக்கின்றது உனக்கு? எழப் போகிறாயா இல்லையா?

திருவெம்பாவை 12. திருவிளையாடல் புரியும் ஐயன்

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைசிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டுஆர்ப்ப
பூத்திகழும் பொய்கைகுடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்திஇரும் சுனைநீர் ஆடு ஏலோர் எம்பாவாய்!

பொருள்: நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவமாகவும் அவர் விளங்குகின்றார். இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தைம் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன்.

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நமக்குரிய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரில் நாம் மார்கழி நீராடுவோமாக!

No comments:

Post a Comment