Wednesday, December 28, 2011

திருப்பாவை – 9. எம்பெருமானை காண எழுப்புதல்

Kannan with Radhai

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உம் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம். அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர, அழகிய தூபம் மணக்க, அங்கு போடப்பட்டுள்ள சப்பர மஞ்சத்தில் ஒய்யாரமாக தூங்கும் மாமன் மகளே, எழுந்து வந்து கதவைத் திறக்க மாட்டோயோ!

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாமல் நித்திரையில் இருக்கிறாள். அவள் என்ன ஊமையா, செவிடா, ஓயாத தூக்கத்தில் இருக்கிறாளா? அல்லது மந்திரத்தினால் கட்டுண்டு?

மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.


திருவெம்பாவை – 9. சிவனடியார்களை போற்றுவோம்

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

பொருள்: இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.

உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம். எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்!

No comments:

Post a Comment