மியான்மரின் பெண் சிங்கம் ஆங்சாங்சூகி
மரணப்படுக்கையில் இருந்த கணவரைப் பார்க்க்ப்போனால், தாய்நாட்டை மறந்துவிட வேண்டியதுதான் என்ற நிலையில் ,தேசமே பெரிது என எண்ணி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவரும்,உலக முன்வரிசை போராளியுமான ஆங் சாங் சூகியை, இந்த வாரம் அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சந்திக்க வருகிறார்.இதை அடுத்து, உலக அரசியல் வரலாற்றில் ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில் ஆங்சாங்சூகியின் கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோமா...
இன்றைக்கு மியான்மராக உள்ள அன்றைய பர்மாவில் மக்களாட்சி மலர போராடியவர்தான் ஆங்சான்.இவரது மகள்தான் ஆங் சான் சூகி.இவர் 1945ம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்து அன்புடன் அப்பா என்றழைக்கப்பட வேண்டிய நேரத்தில் ,அதவாது அவரது இரண்டாவது வயதில் இவரது தந்தை ஆங்சான் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் காரணமாக சிதறி சின்னபின்னமான ஆங் சானின் குடும்பம் பல இடங்களில் இடம் பெயர்ந்தது.ஆங் சாங் சூகி இந்தியாவிலும்,இங்கிலாந்திலும் படிப்பையும் வாழ்க்கையும் தொடர்ந்தார்.பல்வேறு பட்டங்கள் பெற்ற நிலையில் ஆராய்ச்சி மாணவரான மைக்கேல் ஆரிசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கணவர் இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை லண்டனில் நீரோடை போல போய்க்கொண்டு இருந்தது.
அப்போது உடல் நலிவுற்ற தன் தாய் "கின் கி'யை பார்ப்பதற்காக மியான்மருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆங்சான் சூகி பயணம் மேற்கொண்டார்.வந்தவருக்கு தன் தாயின் உடல் நிலையைவிட, அதிர்ச்சி தந்த விஷயம் நாட்டில் தாண்டவமாடிய வறுமையும்,ஏழ்மையும்தான். மேலும் மியான்மர் உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு ஏழ்மை நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்து.மக்கள் சிரமத்தில் இருந்தனர்.அந்த நேரம் நாட்டுவிடுதலைக்காக போராடியவர்கள் ஐயாயிரம் பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது போன்ற சம்பவங்களலால் உலுக்கி எடுக்கப்பட்ட ஆங் சான் சூகி உறுதியான மற்றும் இறுதியான ஒரு முடிவெடுத்தார்.
தனது தாய்நாட்டின் விடுதலைக்காக போராட முடிவு செய்த,ஆங் சான் சூகி ஜனநாயக லீக் கட்சியை துவங்கி தலைவியானார்.மக்கள் இருகரம் நீட்டி அள்ளி அணைத்து தங்கள் இதயத்தில் ஏந்திக்கொண்டனர்.ஆனால் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆங் சான் சூகியை வீட்டுக்காவலில் தனிமைச் சிறையில் வைத்தனர்.
யாரையும் பார்க்ககூடாது,தொலைபேசி வசதி கூட கிடையாது,சேதமடைந்த,பழமையான வீட்டில் பல நேரம் மின்சாரம் இருக்காது,பெரும்பாலும் மெழுகுவர்த்தி வெளிச்சம்தான், இரண்டு வயதான பெண்கள்தான் உதவிக்கு என்ற நிலையில் ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல இருபது ஆண்டுகள் அந்த தனிமைச் சிறையில் வாடினார்.
ஆனாலும் நம்பிக்கையை விடமால் ஜனநாயக முறையில் போராட்டத்தை தொடர்ந்தார். கடிதங்களால் மக்களிடம் நம்பிக்கை வளர்த்தார்.இந்த நிலையில் 1990 ல் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் 485 இடத்தில் போட்டியிட்டு 392 இடங்களில் ஜெயித்து காட்டினார். ஆனால் இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்த ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகியின் கட்சிக்கு தடைவிதித்தும் பார்த்தது. போட்டிக்கு 32 கட்சிகளை வளர்த்துவிட்டது. ஆனாலும் மக்கள் ஆங் சான் சூகியின் பக்கமே நின்றனர்.
இடையில் புற்றுநோய் ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருந்த தனது கணவரை காண விரும்பிய ஆங் சான் சூகிக்கு மியான்மர் அரசு அனுமதி மறுத்துவிட்டது.,பின் ஒரு கடுமையான நிபந்தனை போட்டது லண்டனில் இருக்கும் தனது கணவரைப் பார்க்கலாம் ஆனால் பிறகு திரும்ப தனது தாய்நாட்டிற்கு வரக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
கணவரா? தேசமா? என்ற கேள்விக்கு முன் தேசமே பெரிதென முடிவெடுத்து கடைசிவரை கணவரை பார்க்காமலேயே இருந்துவிட்டார்.இதே போல பிள்ளைகளையும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பார்க்க முடியாத நிலை நீடித்திருந்தது.
இவை அனைத்தையும் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் தாங்கிக்கொண்ட ஆங் சான் சூகிக்கு கடந்த 90 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதை அடுத்து உலக நாடுகளின் பார்வையில் விழுந்த ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கும்,கட்டாயத்திற்கும் உள்ளான ராணுவ அரசு கடந்த 2010ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.
ஆங் சான் சூகி விடுதலையான போது அவருக்கு வயது 65.நாடி,நரம்புகள் தளர்ந்து வாடி வதங்கிப்போனவர் வாழ்க்கை அத்துடன் முற்றுப்புள்ளியானது என்று நினைத்தவர்கள் மனதில் மன்விழும் வகையில் மீண்டும் பினிக்ஸ் பறவையாக எழுந்துவிட்டார்.
தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை,நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள்,நான் இல்லாவிட்டால் இன்னொருவர் என்று இந்த மியான்மரில் ஜனநாயக கொடியை பறக்கவிட்டே தீர்வோம் என்று சூளுரைத்துள்ள ஆங் சான் சூகியை இந்த வாரம் அமெரிக்க வெளி விவாகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சந்திக்க வருவதாக சொல்லியுள்ளார்.அமெரிக்கா வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் இப்போதுதான் மியான்மர் வருகிறார் அதுவும் ஆங் சான் சூகியை சந்திக்க.
இந்த சந்திப்பு மியான்மர் மக்களின் நிம்மதி கனவை நனவாக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பலருக்கு வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்,வெகு சிலருக்குதான் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்
அந்த வெகு சிலரில் ஒருவர் ஆங் சான் சூகி.
No comments:
Post a Comment