மும்பை: ஆண்டுதோறும் சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் டாடா குழுமத்தின் அடுத்த தலைவராக சைரஸ் பி.மிஸ்ட்ரி தேர்வு செய்யப்படவுள்ளார். 43 வயதே ஆன மிஸ்ட்ரி, ரத்தன் டாடாவைத் தொடர்ந்து அந்தக் குழுமத்தின் தலைவராக உள்ளார்.
டாடா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் குழுமத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தைச் சேர்ந்தவர் மிஸ்ட்ரி. இவரது குடும்பமான ஷாபூர்ஜி பல்லோன்ஜி தான் டாடா நிறுவனத்திலேயே மிக அதிகமான பங்குகளை வைத்துள்ளது என்பது குறிப்படத்தக்கது. டாடாவின் டிசிஎஸ் சாப்ட்வேர் நிறுவனத்திலும் மிஸ்ட்ரி குடும்பத்தினரின் முதலீடு உள்ளது.
இது தவிர கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள ஷாபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பே ரூ. 38,000 கோடிக்கும் அதிகமாகும். இந்தியாவின் 10வது பணக்காரக் குடும்பம் இது.
டாடா நிறுவனத்தில் ஷாபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளில் பாதி சைரஸ் மிஸ்ட்ரியின் பெயரில் தான் உள்ளது. ஆக, பெரும் பணக்காரரான மிஸ்ட்ரி அதே அளவுக்கு மிக மிக அடக்கமானவர்.
2006ம் ஆண்டிலிருந்தே டாடா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து வருகிறார். ஆனால், ஷாபூர்ஜி பல்லோன்ஜி குடும்பத்தினர் யாருமே வெளியுலகில் தங்களை எங்குமே முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. மிக அடக்கமான குடும்பம் இது. அதே வழியைத் தான் மிஸ்ட்ரியும் கடைபிடித்து வருகிறார்.
டாடா இயக்குனர் குழுவில் இருந்தபோது இவர் அளித்த ஆலோசனைகள் ரத்தன் டாடாவை மிகவும் ஈர்த்ததாகவும், இவரது தன்னடக்கமும் தொழிலில் இவரது மிகக் கூர்மையான செயல்பாடுகளுமே இவரை டாடா நிறுவனத்தின் அடுத்த தலைவராக தேர்வு செய்ய வைத்ததாகவும் ரத்தன் கூறியுள்ளார்.
தனக்கு அடுத்தபடியாக இந்த நிறுவனத்தை நடத்த ஒரு வாலிபரை கடந்த 3 ஆண்டுகளாகவே டாடா தேடி வந்தார். முதலில் ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடா தான் இந்தப் பதவிக்கு வருவார் என்று கருதப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக சைரஸ் மிஸ்ட்ரியை தேர்வு செய்துவிட்டார் ரத்தன் டாடா.
பார்ஸி இனத்தைச் சேர்ந்த ஒருவரே டாடா நிறுவனத்தின் தலைவராக இருப்பது வழக்கம். அந்த வகையில் மிஸ்ட்ரியும் பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்தவரே.
முதல்கட்டமாக டாடா குழுமத்தின் துணைத் தலைவராக சைரஸ் பி.மிஸ்ட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போது தலைவராக உள்ள ரத்தன் டாடா 2012ம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெறுகிறார். அதன் பிறகு, மிஸ்ட்ரி புதிய தலைவராக பொறுப்பேற்பார்.
இப்போது ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள மிஸ்ட்ரி, அந்த நிறுவனத்தின் அதிபரான பல்லோன்ஜி மிஸ்ட்ரியின் இளைய மகன் ஆவார்.
பல்லோன்ஜியின் மனைவி அயர்லாந்தைச் சேர்ந்தவர். அங்கும் ஷாபூர்ஜி பல்லோன்ஜியின் குடும்பத்தினர் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நாட்டிலும் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தக் குடும்பம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது டாடா நிறுவனம் 5 கண்டங்களில் 80 நாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 85 நாடுகளுக்கு டாடா நிறுவன பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 58 சதவீதம் வெளிநாடுகளில் தான் ஈட்டப்பட்டது.
உலகம் முழுவதும் டாடா நிறுவனங்களில் 4.25 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
No comments:
Post a Comment