Thursday, July 7, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்




ஏழு பேர் அடங்கிய குழு அந்த ஆறாவது அறையின் இரும்புக் கதவை திறப்பதற்கான வழி முறைகளை யோசிக்கும் முன் நாம் இந்த கோவிலின் பூர்விகத்தையும், திருவாங்கூர் சமஸ்தானத்தையும் பார்ப்போம்.


பத்மநாப சாமி கோவில் வைணவர்களின் நூற்றியெட்டு திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். ஆறாவது நூற்றாண்டில் கோவில் தொடங்கப் பட்டிருக்கலாம் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களில் கோடிட்டு காண்பிக்கப் பட்டிருக்கிறது. கோபுரமும் மற்றைய பிரகாரங்களும் பதினாறாவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.

கருவறையில் விஷ்ணு ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கிறார். ஆதிசேஷன் தலையை உயர்த்தி விஷ்ணுவின் இடது கையில் ஏந்தியிருக்கும் தாமரையை நோக்கியிருக்கும். பத்மநாபா சாமியின் வலது கை சிவலிங்கத்தையும், ஸ்ரீதேவி, பூதேவியை நோக்கியிருக்கும். அவர் நாபியிலிருந்து வரும் தாமரையில் பிரம்மா வீற்றிருப்பார். இந்த விக்ரகம் 12008 சாளிக்ராமக் கற்களால் உருவாக்கப்பட்டது. இந்தக் கற்கள் நேபாளத்திலிருந்து தருவிக்கப் பட்டதாம். இந்த விக்ரகத்தின் மேல் ஒரு ஆயுர்வேதக் கலவை பூசப்பட்டிருக்கிறது. ஆதலால் இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

கருவறை முன் உள்ள மேடை ஒற்றைக் கல்லால் செய்யப்பட்ட காரணத்தால் ஒற்றைக்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மேடயிலேறிதான் நாம் பத்மநாபரை தரிசிக்க முடியும். இங்கு ராஜாவைத் தவிர யாரும் விழுந்து வணங்குதல் கூடாது, மேலும் நம்மிடமிருந்து தரையில் விழும் பொருட்கள் கோவிலை சேரும்.



இங்கு நைவேத்யம் செய்யும் பாயசம் மிகவும் பிரபலம். அவை ரத்தினபாயசம், மேனி துலா பாயசம், பால் மாங்கா, ஓட்ட துலா பாயசம், பால் பாயசம். வியாழன் அன்று ஒரு ஸ்பெஷல் பானகம் தருகிறார்கள். “உப்பு மாங்காய்” தேங்காய் ஓட்டில வைத்து சாமிக்கு படைக்கிறார்கள்.

இங்கு நடக்கும் உற்சவங்களில் ஆறு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் லட்சதீபம் காண கிடைக்காத காட்சியாகும், கோவிலை சுற்றி ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றுகிறார்கள்.

பாதாள அறைகள்


கோவிலில் ஆறு பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் தான் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட விலை உயர்ந்த நகைகள், தங்க நாணயங்கள், வைர கற்கள் முதலியவற்றை வைத்து பாதுகாத்திருக்கிறார்கள். அவற்றில் தங்கத்திலான பதினாறடி நீளமுள்ள யானை கட்டும் சங்கிலி இப்பொழுது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. (இதனை வைத்து யானையை கட்டிப்போட முடியாதென்பது வேறு விஷயம்) அதன் எடை மட்டும் முப்பது கிலோவாம். ஐந்து அறைகளில் உள்ள புதையலின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடி. ஆறாவது அறை இரும்பு க்ராதிகளால் அடைக்கப் பட்டிருக்கிறது. அதை திறக்க ஆய்வாளர்களின் உதவியை நாடியிருக்கிறது ஏழு பேர் அடங்கிய சொத்து தணிக்கை குழு.

இந்தக் கோவில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தம். முதலில் கோவிலின் சொத்துக்களை பாதுகாக்க எட்டு வீட்டில் பிள்ளைமார் என்கிற நாயர் குழுவிடம் இருந்திருக்கிறது. பிற்பாடு எழுந்த பிரச்சினைகளின் காரணமாக இந்த சமஸ்தானத்தை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். ராஜா குடும்பம் தங்களை பத்மநாபதாசன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மேலும் இந்த சொத்துக்களை இது நாள் வரை பாதுகாத்திருக்கிறார்கள். ராஜா ஒரு நாள் கோவிலுக்கு போகவில்லை என்றால் அதற்கு உண்டான அபராதத்தை கட்டியிருக்கிறார்கள்.

அவரது வம்சா வழியில் வந்த தற்போதைய ராஜா “உத்ராட திருநாள் மார்த்தாண்ட வர்மா”, இந்த சொத்துக்கள் மதிப்பீட்டிற்கு பின் தான் என் கண்கள் பேசும் என்று சொல்லியிருக்கிறார். இவரும் பழைய வழக்கப்படியே கோவில் செல்லாத நாட்களில் நூற்றைம்பது ருபாய் ஐம்பைத்தைந்து காசு அபராதத் தொகை செலுத்துகிறார். மேலும் கோவிலை விட்டு வெளியே வருமுன் காலில் ஒட்டியுள்ள மண்ணை கோவிலிலேயே தட்டிவிட்டு வருகிறார். கோவிலில் உள்ள மண் பத்மநாப சாமிக்கு சொந்தம் என்ற அசையாத நம்பிக்கையில் தான் கோவில் சொத்தை பாதுகாத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த சமஸ்தானத்தின் ராஜா கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என்பது காலம் காலமாக இருந்த நியதி. ராஜாவின் சகோதரியின் மகன்தான் அடுத்த பட்டத்து ராஜா. (ஆதலால் தான் கோவில் சொத்தில் ஆட்டையைப் போடாது இருந்திருக்கிறார்கள். நம்ம அரசியலாக இருந்தால் பெண்டாட்டி வைப்பாட்டி என்று வைத்து ஒரு வழி செய்திருப்பார்கள்).

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல வக்கீல் டி.பி. சுந்தராஜன் தொடுத்த பொது நல வழக்கு இப்பொழுது புதிய பிரச்சினையை கிளப்பியிருக்கிறது இப்பொழுது கேரளா அரசாங்கத்திற்கு புதிய தலை வலி ஏற்கனவே மூன்றடுக்கு செக்யூரிட்டி போட்டிருக்கிறார்கள். சொத்து மதிப்பீட்டிற்கு பிறகு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்க வேண்டும். இதை அரசாங்கம் உபயோகப் படுத்துவதாக இருந்தால் மற்றைய மத போர்டுகளில் உள்ள சொத்துக்களையும் ஆராய்ந்து கையகப் படுத்த வேண்டும் என்ற புதிய பிரச்சினை கிளம்பும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: கூகிளாண்டவர்

No comments:

Post a Comment