Tuesday, August 20, 2013

குழந்தைகள் சீக்கிரம் பேச வேண்டுமா?


குழந்தைகள் பிறந்த பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பேசுவது. ஏனெனில் அனைத்து குழந்தைகளும் சீக்கிரம் பேசிவிடமாட்டார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். சொல்லப்போனால் தாமதமான பேச்சு என்றால், எப்போது குழந்தை ஒரு வார்த்தை கூட பேசாமல், ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறதோ, அதைத் தான் சொல்வார்கள்.

மேலும் சில குழந்தைகள் 2 வயதாகியும் பேசமாட்டார்கள். அப்போது உடனே குழந்தைகளை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அடுமட்டுமின்றி அத்தகைய குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான முறைகளையும் தெரிந்து கொண்டு, அதனை குழந்தைகளில் நடைமுறைப்படுத்தி, விரைவில் பேச வைக்க வேண்டும். இப்போது அந்த மாதிரியான குழந்தைகளை விரைவில் பேச வைப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போமா!!!

* குழந்தை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாகியும் பேசவில்லையெனில் அதற்கு காரணம் அவர்களுக்கு சரியாக எழுத்துக்கள் புரியவில்லை என்று அர்த்தம். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு எதுவும் சரியாக பேசத் தெரியாது. அதனால் சில குழந்தைகள் பேசுவதற்கு பயந்து பேசாமல் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் வைத்து பேசும் திறன் கொண்டவர்கள். எனவே அவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க, அவர்களிடம் பெற்றோர் நன்கு பேச வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களை உற்சாகப்படும் படியாகவும், அவர்களை அதிகமாக பேச வைப்பது போலும் பேச வேண்டும்.

* ஏதாவது ஒரு புதிய சொல்லை சொல்லித் தரும் போது, அவர்களுக்கு அதை போட்டோவில் காண்பிக்காமல், முடிந்த வரையில் அந்த பொருட்களை அவர்களுக்கு நேரில் காண்பிப்பது நல்லது. அதே நேரம் அந்த பொருள் எதற்கு உதவுகிறது என்றும் அவர்களுக்கு புரியும் வகையிலும் சொல்ல வேண்டும். முக்கியமாக எந்த ஒரு பொருளை பார்க்கும் போதும், அதை அவர்களிடம் திரும்ப திரும்ப சொன்னாலும், அவர்கள் மனதில் பதிந்துவிடும். அவர்களும் எந்த பயமுமின்றி பேசுவார்கள்.

* குழந்தைகளுக்கு படங்களுடன் கூடிய புத்தகங்களை காண்பித்து, அதை அவர்களுக்கு அடிக்கடி காலை அல்லது மாலை நேரங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அவர்கள் மனதில் எந்த ஒரு விஷயமும் எளிதில் பதிந்துவிடும். அதுமட்டுமின்றி, அந்த சொற்களை திரும்ப திரும்ப சொல்லும் போது, அவர்கள் அதை எப்போதும் மறக்காமல் இருப்பார்கள்.

* குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பதன் மூலமும் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். அதையும் ராகத்துடனும், அசைவுடனும் சொல்லிக் கொடுத்தால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பதோடு, மனதில் உற்சாகம் அதிகரித்து, அவர்களை எளிதில் பேச வைக்கலாம்.

* சில குழந்தைகள் விரைவில் பேசாமல் இருப்பதற்கு, அவர்களது வெட்கமும் காரணம் என்று சொல்லலாம். ஆகவே அவர்களின் வெட்கத்தை போக்குவதற்கு அவர்களை வெளியே அழைத்துச் சென்று, மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதன் மூலமும், அவர்கள் வெட்கத்தை விட்டு, மற்றவர்கள் எப்படி பேசுகின்றனர் என்பதைப் புரிந்து பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

மழலை மொழி என்பது ஒரு இனிமையான ஒரு மொழி. அந்த இனிமையான மொழியை உங்கள் குழந்தைகளிடம் விரைவில் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், அவர்களை விரைவில் பேச வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, பேச வைக்க வேண்டும். ஆகவே மேற்கூறிய ஒரு சிலவற்றை பின்பற்றுவதன் மூலம் அவர்களை விரைவில் பேச வைக்கலாம். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
BY
நெடுவாழி

No comments:

Post a Comment