உங்களுக்கு கடந்த தேர்தலில் ஓட்டளித்தமையால் மிகவும் உரிமையோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
எனக்கு பெரிய அளவு அணு அறிவியலை பற்றி எல்லாம் தெரியாது. இருந்தாலும் இதை எழுதுகிறேன். "நாட்டை மெல்ல கொல்லும் புற்றுநோயான ஊழலை நாளரும் மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன தி.மு.க ஆகிய கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த ஒரு ரட்சணியாகவே உங்களை தமிழக மக்கள் பார்த்தார்கள். உங்களை அபரிமிதமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்கள்.
நீங்களும் பல நல்ல மக்கள் நல திட்டங்களை செய்வதாக சொல்லி ஆட்சி பீடத்தில் ஏறி அமர்ந்தீர்கள். உங்களை சுற்றி இருந்த சில தீய சக்திகளையும் குதிரைக்கு 20 அடி, யானைக்கு 60 அடி என்பது போல தூரத்தில் வைத்துக் கொண்டீர்கள். மேலும், மக்களின் எதிர்பார்ப்புக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் திட்டங்களை சொன்னது போலவே அமுல்படுத்தி வருகிறீர்கள்.
விலையில்லா அரிசியை கொடுத்ததால் பூணை படுத்துறங்கிய ஏழைகளின் அடுப்புகளில் சோற்றுப் பாணை ஏறியது. அதே போல் உழவுக்கு கால்நடைகளே தலை என்ற மொழிக்கு இணங்க கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக ஆடு, மாடுகளை வழங்க ஆணையிட்டீர்கள். அதனால் இன்றைக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிலேயே தமிழகத்தின் பால் உற்பத்தியும், கால்நடை செல்வங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
இந்த திட்டத்தை கூட சிலர் கேலியும் கிண்டலும் செய்தார்கள். தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று கூறப்படும் ராமதாஸ் கூட கிராம மக்களின் எதிர்கால சந்ததிகளை படிக்க விடாமல் ஆடு, மாடுகளை மேய்க்க வைக்க உங்கள் அரசு முயற்சிக்கிறது என்று பேசியிருந்தார். ஆனால் அவருக்கே இந்த திட்டத்தின் மகிமை இன்னும் சிறிது நாள் கழித்து தான் தெரியும்.
ஆட்டின் பிழுக்கையும், மாட்டின் சாணமும் இந்த பிரபஞ்சத்தில் கிடைக்கும் எந்த வித உரங்களையும் விட அபரிமிதமான உரச்சத்தை கொண்டவை. ஆடுகளும், மாடுகளும் பெருகினால் இந்தியாவின் உரத்தேவை பலமடங்கு குறைந்து விடும். வெளிநாடுகளில் இருந்து உரத்தை வாங்க வேண்டிய தேவை இல்லாமல் போகும். நாட்டில் அப்போது இயற்கையான ஆடு,மாடு சாண உரங்களால் விளைவிக்கப்படும் காய்கறிகள், பயிர்களின் விலையும் குறையும். மக்கள் இயற்கை விவசாயத்தால் உருவான பொருட்களை சாப்பிடுவார்கள் என்ற தொலைநோக்கு பார்வை அல்லவா உங்கள் இலவச ஆடு, மாடு திட்டத்தின் பின்னணியில் இருக்கிறது. ராமதாஸ் இதை தெரிந்து கொள்ளும் போது உங்களை நிச்சயம் போற்றுவார்.
கடந்த முறை நீங்கள் ஆட்சியில் இருந்த போது தான் சென்னையில் கண்டிப்பான முறையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமுல்படுத்தினீர்கள். மக்களுக்கு இந்த மழைநீர் சேகரிப்பு அறிவியல் சரிவர புரிதல் ஏற்படாத ஒன்று என்றாலும், குறுகிய காலத்திற்குள் அதை அமுல்படுத்தி சாதனை படைத்தீர்கள். அந்த திட்டத்தின் பயன் பொதுமக்களுக்கு அப்போது சரியாக தெரியவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் நிபுணர் குழு ஆய்வு செய்த போது மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட்டதால் சென்னையில் நிலத்தடி நீரின் அளவு 40 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது என்று சொன்ன போது படித்த மக்களும், பாமரர்களும் இந்த திட்டத்தின் அளப்பரிய பயனை உணர்ந்து கொண்டார்கள்.
ஆனால் இன்றைக்கோ, பாழாய் போன காங்கிரஸ் அரசின் உரக்கொள்கையால் நிலத்தில் போடும் நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் உரமூட்ட பொட்டாஷ் உரத்தையும், யூரியாவையும் காசு கொடுத்து வாங்க முடியாமல் தானே ஒவ்வொரு விவசாயியும் விவசாயமே வேண்டாம் என்று ஓடுகிறான். காங்கிரஸ் கட்சியின் மந்திரிகளோ ஆப்பிரிக்காவில் போய் நிலத்தை வாங்கி இந்தியாவிற்கு தேவையான அரிசியையும், சோளத்தையும் விளைவித்துக் கொள்ளலாம் என்கிறர்கள். எல்லாம் வேறு எதற்கு? அலைக்கற்றை போல, நிலக்கரி போல் நிலம் வாங்குவதிலும் கோடி கோடியாக அள்ளத்தான். ஆப்பிரிக்காவில் போய் நிலத்தை வாங்கி அந்த நிலத்தில் சாகுபடிக்கு மாடு கட்டி போரடிப்பது காங்கிரசின் மந்திரிகளா? என்ற கேள்விக்கு மட்டும் பிரதம மந்திரியும், மேதாவியுமான மன்மோகன் சிங்கிடம் வழக்கம் போல் பதில் இல்லை.
மன்மோகன் சிங்காக மிடுக்காக இருந்த அவர் மவுன மோகன்சிங் ஆக மாறி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. காங்கிரஸ் கட்சியின் மந்திரிகளும் அந்த கட்சியை நடத்த பின்னால் இருக்கும் முதலாளிகளும் விவசாயத்துக்கு மின்சாரத்தையும், மானியத்தையும் குறைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் வரிந்து கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி இனி எந்த பிரயோசனமும் இல்லை என்ற முடிவுக்கு நாட்டின் பல மாநில மக்களும் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. காங்கிரஸ் கட்சி செத்துக் கொண்டிருக்கிறது. அது போன்ற இடத்தில் பிடுங்கியது வரை லாபம் என்ற மனநிலைக்கு அந்த கட்சியின் மந்திரிகள் வந்து விட்டதால் தான் இன்றைக்கு 2 ஜி ஊழலும், நிலக்கரி ஊழலும் மல்லுக்கட்டி நிற்கின்றன.
நாட்டுக்கு சோறு போடும் விவசாயத்திற்கு உதவும் மின்சாரத்தையும், மானியத்தையும் குறைப்போம் என்று சொல்லும் இவர்களை நம்பினால் தமிழகமும் எதிர்காலத்தில் தத்தளித்து போகும் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. எனவே, நீங்கள் இப்போதே சுதாரித்துக் கொண்டு தமிழக மக்களின் நினைவில் என்றும் நிற்க ஆக வேண்டிய முடிவை எடுக்கும் காலம் வந்து விட்டது.
வழக்கமாக நீங்கள் பொதுக்கூட்ட மேடையில் பேசும் போது குட்டிக் கதைகளை சொல்வீர்கள். நான் இங்கு சொல்லும் குட்டிக் கதை காங்கிரஸ் கட்சி பாரதம் என்னும் மாபெரும் தேசத்தின் பெருமையை மறந்து போய் ஊழலும், சுரண்டலுமான தேசமாக ஆக்கி வருவதை அடையாளப்படுத்த தான்.
கிரேக்க நாட்டின் மாவீரன் அலெக்சாண்டர் அடக்க முடியாத குதிரைகளை அடக்கி புகழ் பெற்றவன். அவனது தந்தை மாசிடோனிய மன்னன் பிலிப், உலக நாடுகள் பலவற்றை பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவல் அவனிடம் உண்டு. அவனது அவைக்கு வணிகன் ஒருவன் வருகிறான். பல நாடுகளுக்கும் சென்று வந்தவன் அவன். உலகிலேயே அற்புதமான நாடு கிரேக்கம் தான் என்கிறான் அவன். கடவுளின் நாடு இது. வீரமும், பலமும் இங்கு தான் கொழிக்கின்றன என்கிறான் அவன்.
'பாரத நாடு எப்படி' என்று அவனிடம் கேட்கிறான் பிலிப். அந்த நாட்டின் செல்வ வளம் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். "அது தான் கடைசி தரத்தில் இருப்பது" என்றான் வந்தவன். தொடர்ந்து, "அபாரமான வளமும், செல்வமும் அங்கு உண்டு. ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் அறிவு அந்த மக்களுக்கில்லை. வீரம் மருந்துக்கும் அவர்களிடம் இல்லை. குதிரைகளை வண்டி இழுக்க பயன்படுத்துகிறார்கள். யானை என்றொரு பலம் வாய்ந்த பிராணி. அதை களங்களில் நெல் அடிக்கவும், கோயில் விழாக்களில் குழந்தைகள் சவாரி செய்யவும் பயன்படுத்துகிறார்கள்." இதைக் கேட்டு பிலிப் மன்னனின் அவையில் இருந்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
"என்ன? போரில் பயன்படுத்தக்கூடிய வலிமையான குதிரைகளை பாரம் சுமக்க பயன்படுத்துகிறார்களா? என்ன அறீவீனமாக மக்கள்?" என்றான் பிலிப் வியப்புடன்.
மறுநாள் அலெக்சாண்டர் இதை தன் குருவிடம் அப்படியே சொன்ன போது அவனது குரு அரிஸ்டாட்டில் சொன்னார். "அலெக்சாண்டர்! உன் தந்தையும் அவையில் உள்ளவர்களும் சொன்னது போல் நீயும் பாரத தேசத்தை சாதாரணமாக எண்ணி விடாதே. அந்த வணிகன் கூறியது உண்மை எனில் உலகிலேயே மிகவும் உன்னதமான நாடு பாரதம் தான். போர் வெறி கொண்ட இந்த அறிவிலிகளால் அதன் பெருமையை உணர முடியாது".
"எப்படி?" என்றான் அலெக்சாண்டர்.
"எங்கே ஞானம் அரசு செலுத்துகிறதோ அங்கே குதிரைகள் பாரம் இழுக்கத்தான் செய்யும். அஞ்ஞானமும், பேராசையும் ஓங்கி நிற்கும் இடத்தில் தான் குதிரைகள் போரில் பயன்படுத்தப்படும். நீ இந்த நாட்டின் அரசன். ஆனால் அவசியம் பாரத நாட்டிற்கு சென்று அங்குள்ள ஆட்சி முறையை கிரேக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்."
அரிஸ்டாட்டிலின் சொற்கள் அலெக்சாண்டரின் மனதில் ஆழப்பதிந்து விட்டன. பாரத நாட்டை காண வேண்டும் என்று கிளம்பிய அவன் வேறு வழியில்லாமல் வரும் வழியில் நாடுகளுடன் போரிட நேர்ந்தது. அவனால் இந்தியாவை காண முடிந்தது. ஆனால், இங்கிருந்து அவனால் எந்த ஆட்சி முறையையும் தன்னுடன் எடுத்து செல்ல முடியவில்லை. பாதி வழியில் பாபிலோனியாவில் உயிரிழந்து விட்டான். இப்படி உலகின் மிகப்பெரிய தத்துவ மேதைகளும், அரசர்களும் பாராட்டியதும், காண விரும்பியதுமான ஒரு நாடு தான் காங்கிரஸ் என்ற கட்சியின் ராட்ச கரங்களில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த குட்டிக்கதைக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்க கூடும்.
அதாவது, காங்கிரஸ் முதலாளிகளின் லாபவெறிக்கு இன்றைக்கு ஏதுமறியா கிராம மக்களும், பழங்குடியினரும் பலியாக்கப்பட்டு வருகின்றனர். மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் புறக்கணித்து விட்டு நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாக சொல்லி ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களில் பழங்குடி மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து செழிக்கும் காடுகளை அழித்து வருகின்றனர். அரிஸ்டாட்டில் சொன்னது போல் இயற்கையோடு வாழ்க்கையை பொருத்தி வாழ தெரிந்து கொண்ட அற்புதமான மனிதர்களை கொண்ட நாடு இது. காடுகளை அழித்தால் மழை பொழியாது என்பது சிறிய குழந்தைகளுக்கு கூட தெரியும். நிலக்கரியை எரித்தால் பிரபஞ்சம் வெப்பமடைந்து பனிமலைகள் எல்லாம் உருகி வழிந்து விடும். பிறகு கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதி பேராபத்தில் சிக்கும் என்பதெல்லாம் இன்றைய குழந்தைகளின் எல்.கே.ஜி பாடத்திலயே இருக்கின்றன. ஆனால் என்னவோ காங்கிரசின் மகாமந்திரிகளுக்கு தான் இது தெரியவில்லை.
அதே போல் யாரையோ திருப்திப்படுத்த அணு உலையால் தான் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று சொல்லி முடிவெடுத்த காங்கிரசின் அறிவுஜீவிகள் அதை வடமாநிலங்களில் திட்டமிட்டு ஆந்திரா, கேரளாவில் விரட்டப்பட்டு கடைசியில் கேரளாவில் கட்டி முடித்தது காங்கிரஸ் அரசு. அணு உலைக்கு எதிராக உலகம் முழுக்க எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும் வேளையில் இப்படி ஒரு அணு உலை நிறுவுவது நியாயம் தானா? ஜப்பானை விடவா ஒரு உற்பத்தி உலையை திறக்கவும், பராமரிக்கவும் மேம்பட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள்? அங்கேயே புகுஷிமா நடந்து போனதே........!
மழைநீரை சேகரித்ததால் இன்றைக்கு சென்னை உள்பட பல நகரங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. ஆடு, மாடு வளர்ப்பதால் உரம் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. பால் கிடைக்கிறது. தேவையற்ற இறக்குமதி குறைகிறது என்ற விபரம் உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படியிருக்கும் போது மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் அணு சக்தி எதற்கு? மின்சேமிப்பு என்பதும் மின்உற்பத்திக்கு சமம் தானே? நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? அதாவது நம்மிடம் இருக்கும் குதிரை என்ற சூரிய வெளிச்சத்தை வைத்து மின்சாரம் என்னும் வண்டியை இழுக்க எளிய முறை இருக்கிறது.
உடனடியாக அரசின் சார்பிலேயே சோலார் தகடுகளை தயாரிக்க ஏற்பாடு செய்த அந்த தகடுகளை குறைந்த விலையிலோ, இலவசமாகவோ கூட மக்களுக்கு வழங்கலாம். அதற்கு முன்னதாக, நீங்கள் ஏற்கனவே அறிவித்த வீட்டிற்கு 3 இலவச சி.எப்.எல் என்ற குறைந்த மின்நுகர்வில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுங்கள்.
அரசு அலுவலங்கள் பலவும் இப்போதும் பகல் நேரத்தில் கூட அத்தனை விளக்குகளையும் ஒளிர விட்டு பணி செய்யும் அவல நிலையில் தான் இருக்கின்றன. எனவே, அரசு அலுவலகங்கள் அனைத்தும் சூரிய ஒளியால் இயங்கும் சோலார் தகடுகளை பொருத்தி அதில் மட்டுமே இயங்க வழி செய்யுங்கள். தமிழகம் முழுவதும் இப்படி எங்கு நோக்கினும் சோலார் மின்சாரம் என்ற நிலை வந்தால் மின்சாரம் பற்றிய கவலை மக்களை விட்டு தலை காட்டாமல் ஓடி விடும்.
இப்போது தமிழகத்தில் தயாரிக்கப்படும் அனல், புனல் மின்சாரங்களை கொண்டு வழக்கமாக தொழிற்சாலைகளை இயக்கலாம். எதிர்காலத்தில் அவற்றையும் சோலாரில் இயங்க செய்யலாம். அல்லது காற்றாலைகளை அதிகப்படுத்தியோ, உங்களின் மற்றொரு கனவுத்திட்டமான கடல் அலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தையே கொண்டு அதீத மின்உற்பத்தியை எட்டலாம்.
இதே போல், நீங்கள் கிராம மக்களுக்கு தரும் இலவச ஆடுகளும், மாடுகளும் பல டன்கள் அளவுள்ள சாணத்தை தருகின்றன. இந்த சாணமானது பயோ கேஸ் என்ற இயற்கை எரிவாயுவை தயாரிக்க பயன்படுத்தலாம். இந்த எரிவாயு மூலம் ஜெனரேட்டரையும் இயக்கலாம். அடுப்பெரிக்கவும் செய்யலாம். இப்படி தயார் செய்யும் போது காங்கிரசின் மக்கள் விரோத எரிபொருள் கொள்கையால் தற்போது நிலவும் செயற்கை கியாஸ் தட்டுப்பாடும் குறைந்து போகும்.
இது எல்லாமே நீங்கள் நினைத்தால் உங்கள் மழைநீர் திட்டம் போல் வெகு விரைவாகவும், எளிதாகவும் நடைபெறக் கூடியதே. அது உங்களுக்கே தெரியும். மின்பற்றாக்குறை கடுமையாக எழுந்த போது நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றி நிலைமையை எடுத்து சொன்னீர்கள். தற்போது கூடங்குளத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்த ராட்சதனாக மக்கள் கருதும் அணுஉலைக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அந்த மக்களின் இயல்பான பிரதிபலிப்பே. ஆனால் அந்த போராட்டத்தை போலீசின் துணையோடு நசுக்க நினைப்பது சரியான முறையாக எனக்கு தோன்றவில்லை.
அணு உலையின் தத்துவத்தை போன்றே உலகின் பிரபஞ்ச நடப்பு தத்துவமும். அதாவது, எது ஒன்று இந்த உலகில் ஒடுங்கி இருக்குமோ அதுவே விரிவடையும். எது மிகவும் நலிவடைகின்றதோ அதுவே மிகவும் வலிமையோடு எழும்பும். சுருங்கச் சொன்னால் மிக, மிக அழுத்தத்துடன் புகுத்தப்பட்ட வெடிமருந்து தான் அதிக வலிமையுடன் வெடித்து சிதறுகிறது.
வலிமை வாய்ந்த பிரிட்டனை ஆயுதம் ஏந்திய கட்டபொம்மனோ, ஜான்சிராணியோ வெல்லவில்லை. அகிம்சையை ஆயுதமாக ஏந்திய காந்தி தான் வென்றார். எத்தனையோ பேர் சுதந்திரத்திற்காக போரிட்டாலும் இது காந்தி தேசம் என்ற பெயரில் அழைக்கப்பட அந்த "அகிம்சையே" காரணம். எனவே, அகிம்சையால் போராடும் அப்பாவிகளை லத்தியின் துணையால் ஒடுக்க இயலாது.
யானையில் உடலில் ஊடுருவிப்பாயும் ஈட்டி பஞ்சுப் பொதியிடம் செல்லுபடியாகாது. அதே போல் கட்டாயப்படுத்தப்படும் எதுவும் வெற்றி பெறாது என்பதற்கு உதாரணம் உண்டு. இந்தியாவில் குடும்பக்கட்டுப்பாடு 1975 ல் கொண்டு வரப்பட்டது. 1976 தேர்தலில் அந்த சட்டத்தைக் கொண்டு வந்த இந்திராகாந்தி தோல்வி அடைந்தார். இதே போல் தான் கள்ளச்சாராய ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த போதும் நடந்தது.
கூடங்குளம் போராட்டத்தை உங்கள் மேல் திசை திருப்பி விளையாட காங்கிரஸ் முயற்சிக்கிறது அம்மா! இதை நீங்கள் சற்று நடப்பையும், காங்கிரசின் அணுஉலை மந்திரி நாராயணசாமி பேசி வருவதையும் கவனித்தால் புரிந்து கொள்வீர்கள்.
இந்த நேரத்தில் நீங்கள் எடுக்க போகும் அணுஉலைக்கு எதிரான இயற்கையை காக்கும் முடிவை உலகமே வியந்து போற்றும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். நான் இங்கு எழுதியதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் நீங்கள் நம்பும் உங்கள் நண்பர், சோலார் மின்சாரத்தில் இன்று உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ள நரேந்திர மோடியிடமும் ஒரு வார்த்தை கேட்டுப் பார்த்து விட்டு செய்யலாம். செய்வீர்கள் என்று நம்புகிறேன்".
-இப்படிக்கு
உங்களுக்கு வாக்களித்த ஒரு வாக்காளன்
No comments:
Post a Comment