இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல் !!!
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை
என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம்
அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
‘சக்கந்தி’’
இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான்.
தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய்
முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும்
பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார்
வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து
வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.
வாள்வீச்சு,
அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா
போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின.
வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான்.
பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.
இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார்
வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும்
மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை
மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு
குடிபுகுந்தார்.
ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று
இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான்.
ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து
நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல.
போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.
முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற
வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக
சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.
நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன.
அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி
தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.
ஒரு முறை
மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது
நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த
போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும்
வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க
இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில்
கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக்
கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை
வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன்
போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று
பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால்
தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள்.
‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய்
சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும்
நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால்
அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின்
உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப்
படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது
சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய
விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.
நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார்
நாடினார் :
வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர்
படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று
தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர்
அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர்
அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே
வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன்
தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன்
உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
தன்
வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார்.
அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக்
கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத்
துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை
வீழ்த்துவது.
ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன்
நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில்
காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும்
நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத்
தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை
இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு
படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.
சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை
வீழ்த்தியது.
விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே
இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று
வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.
வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள்
மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த
கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள்
எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு
ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது.
வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக
இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது
வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.
No comments:
Post a Comment