Monday, April 9, 2012

பன்றிக்காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்! வீட்டிலேயே மருந்திருக்கு!

இந்தியாமுழுவதும் இன்றைக்கு அச்சுறுத்தும் நோயாக மாறியுள்ளது பன்றிக் காய்ச்சல். இந்த எச்1என்1 கிருமி சாதாரணமாக நுரையீரல் தொற்று அல்லது நுரையீரல் நோயுள்ளவர்க்கு அதிகம் பாதிப்பை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் உலகெங்கும் உள்ள பாதிப்பில் 30% பேர் ஆஸ்துமா நோயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிக்காய்ச்சல் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதற்கு வீட்டிலேயே நம்மிடம் பல்வேறு மருந்துகள் உள்ளன என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

அன்னாசிப் பூ

பன்றிக்காய்ச்சல் மருந்தின் மூலப் பொருள் அன்னாசிப் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டில் மட்டன், சிக்கன் சமைக்கும் போதும், பிரியாணி செய்யும் போதும் பயன்படுத்தப்படும் இந்த அன்னாசிப் பூ பன்றிக்காய்ச்சலை தடுக்கும் அருமருந்தாக உள்ளது. இதில் உள்ள ஷிகிமிக் அமிலத்தில் (skimikic acid) இருந்து தான் அந்த ஆஸ்டமிலாவிர் தயாரிக்கப்படுகிறது.

நில வேம்பு

இந்த ஷிகிமிக் அமிலம் நம் நாட்டு மூலிகைகள் கிட்டதட்ட 291 தாவரங்களில் இருப்பதாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்வம், வேம்பு முதலான 9 முக்கிய மூலிகைகள் இந்த ஷிகிமிக் அமிலம் காணப்படுகிறது. அருகாமையில் வசிப்பவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் குடும்பம் முழுவதும் வில்வம், வேம்பு, அன்னாசிப்பூ மூலிகைகள் அடங்கிய சித்த ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தலாம். இந்த தாவரங்களை சிறிது காரத்தன்மையுள்ள மூலிகைகளுடன் சேர்த்து கசாயமாக்கிச் சாப்பிட கண்டிப்பாக அந்த கசாயத்தில் இருக்கும் ஷிகிமிக் அமிலமும், அதனோடு கூடுதலாய் ஏராளமாய்க் கிடைக்கும் பிற மூலிகை நுண்சத்துக்களும் உடலினை பன்றிக்காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவிடும்.

இது தவிர உடல் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த மிளகு, மஞ்சள், துளசி, வேப்பம் பூ, சீந்தில், நிலவேம்பு சேர்ந்த சித்த மருந்துகளை எடுப்பதன் மூலம் எச்1என்1-க்கு இடம் கொடுக்காமல் உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

துளசி கசாயம்

துளசி இருமலைப் போக்கும் அருமருந்து. தினசரி காலையில் துளசி சாப்பிட்டால் தொண்டை, நுரையீரலை எந்த நோயும் தாக்காது. எந்த கிருமிகள் இருந்தாலும் மடிந்து விடுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

கோவில்களில் தீர்த்தம் கொடுப்பதைப் போல துளசியை பறித்து தண்ணீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து அத்துடன் மிளகு, சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்து கசாயம் போல சாப்பிடலாம்.

வெள்ளைப்பூண்டு

பன்றிக்காய்ச்சலை தடுப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்தாகும். காலையில் பச்சை வெள்ளைப்பூண்டை தட்டி சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் வேகவைத்து அதனை சாப்பிடலாம். இதனால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்.

மஞ்சள், பால்

பால் குடிப்பதனால் அலர்ஜி எதுவும் ஏற்படாது என்று நினைப்பவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு குடிக்கலாம்.

கற்றாழை

கற்றாழை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருள். கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் உடல்வலி, மூட்டுவலி போன்றவை ஏற்படாது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூச்சுப்பயிற்சி

தினசரி மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் தொண்டை, மூக்கு, நுரையீரல் போன்றவற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறிவிடும். ஹெச்1என்1 வைரஸ் மட்டுமல்லாது தீமை தரும் எந்த வைரசும் நம்மை அண்டாது.

நெல்லிக்காய்

வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் அதிகம் சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகும். சிட்ரஸ் அமிலம் அடங்கிய பழங்களை உட்கொள்ளலாம்.

சுகாதாரம் அவசியம்

தினசரி மிதமான தண்ணீரில் நன்றாக கையை கழுவுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்துங்கள் அப்புறம் பன்றிக்காய்ச்சல் எப்படி எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment