Saturday, April 28, 2012
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 : மே 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; ஜுலை 7ல் தேர்வு
சென்னை, ஏப்.28 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்
(குரூப் 4) இளநிலை உதவியாளர் 10,718 பணியிடங்கள், செயல் அலுவலர் 75
பணியிடங்கள் என மொத்தம் 10,793 காலியிடங்களை நிரப்ப ஜுலை 7-ல் தேர்வு
நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் இணையதளங்களில் (www.tnpsc.gov.in மற்றும்
www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகள் தமிழகத்தில்
கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதனால், இளநிலை உதவியாளர்
போன்ற பணியிடங்கள் அரசு அலுவலகங்களில் பெருமளவு காலியாக இருந்தன. இந்த
காலியிடங்களை நிரப்ப போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 10,793
காலியிடங்களை நிரப்ப ஜூலை 7ல் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. 10ம்
வகுப்புத் தேர்ச்சி பெற்ற, 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் இத்தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மே 28ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in
மற்றும் www.tnpscexams.net) தங்களது பெயர், படிப்பு உள்ளிட்ட விவரங்களைப்
பதிவு செய்து ஒவ்வொருவரும் தங்களுக்கான கடவுச் சொல் (“யூஸர் நேம்’) பெற
வேண்டும். அதன் பிறகே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இணையதளத்தில்
விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்த பின்னர் பெறப்படும் செலுத்துச் சீட்டைப்
பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள அனைத்து 805 இந்தியன் வங்கிக் கிளைகள்,
குறிப்பிட்ட 820 அஞ்சலகங்கள் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
கிராம நிர்வாக அலுவலர் போன்று குரூப் 4 பணியிடங்களுக்கும் பட்டதாரி
இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. எனவே, இந்தத் தேர்வுக்கு 10
லட்சத்துக்கும் மேற்பட்டோ ர் விண்ணப்பம் செய்வார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் தேர்வுகளுக்கான மையங்கள் மாவட்டத்துக்கு மூன்று அல்லது நான்கு
என்ற வகையில் மாநிலம் முழுவதும் 110-க்கும் குறைவாகவே இருக்கும். ஆனால்
தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு தேர்வு மையம் என்ற புதிய
நடவடிக்கையை தேர்வாணையம் எடுத்துள்ளது. இதன் மூலம், 220-க்கும் அதிகமான
தேர்வு மையங்கள் குரூப் 4 தேர்வுக்கு அமைக்கப்பட உள்ளன. தேர்வுகளுக்கு
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்
கம்ப்யூட்டர்களுடன் கூடிய 500-க்கும் மேற்பட்ட மையங்கள் தபால் நிலையங்கள்
உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், இணையதள வசதி
இல்லாத கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தேர்வாணைய அதிகாரிகள்
தெரிவித்தனர். தேர்வு நாள் : ஜூலை 7. விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 28.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்புத் தேர்ச்சி. குறைந்தபட்ச வயது : 18.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment