நாளை அம்பிகையை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை கிரீடம், முதுகுத்தண்டு போன்ற வடிவுடைய வஜ்ராயுதம் ஆகியவற்றுடன், யானை வாகனத்தில் அமர்த்தி அலங்கரிக்க வேண்டும். பெரிய பதவிகள், நல்ல வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்க இவளிடம் வேண்டிக்கொள்ளலாம். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். மீனாட்சியம்மன் மீது குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். இதில் வருகைப்பருவம் பகுதியில் அமைந்த ஒன்பதாவது பாடலான தொடுக்கும் கடவுட் பழம்பாடல் என்று தொடங்கும் பாடலைப் பாடும்போது மீனாட்சி ஒரு சிறுமியாக வந்தாள். திருமலைநாயக்கரின் கழுத்தில் இருந்த முத்துமாலையை கழற்றி, குமரகுருபரருக்கு சூட்டி விட்டு சந்நிதிக்குள் ஓடி மறைந்தாள். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண்குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை ஊசல் பருவம் என்று குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் பருவங்களின் அடிப்படையில் ஐப்பசியில் மீனாட்சிக்கு கோலாட்ட விழா நடக்கும். அப்போது அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டியபடியே, கன்னிப்பெண்கள் கோலாட்டம் ஆடுவர். நவராத்திரியின் மூன்றாம் நாளான நாளையும் மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறாள். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக காட்சி தருகிறாள். அன்னையின் அருள்பெற ஊஞ்சல் பாடலைப் பாடி மகிழ்வோம்.
நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
பாட வேண்டிய பாடல்:
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!
No comments:
Post a Comment