Wednesday, September 28, 2011
நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது?
அகிலம் அனைத்தையும் படைத்தவளும், அதை ரட்சிப்பவளும் சாட்சாத் அந்த ஆதிபராசக்தியே ! பொற்கரங்கள் பதினெட்டும், ஒளி வீசும் திருமுகமும் துலங்க, எல்லோருடைய அதிதேவதையாகவும் திகழும் அந்த துர்காதேவியே மகிஷாசுரமர்த்தினியாகவும் சண்டிகாவாகவும்... இன்னும் பற்பல திருநாமங்களில்- திருவடிவங்களில்.. நம்மைக் காக்க அவதாரம் எடுத்து வந்தாள் என்கின்றன புராணங்கள். பரசுராமர், ஸ்ரீராமர், கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களே துர்காதேவியை வழிபட்டு, தேவி வழிபாட்டின் சிறப்பை நமக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். வரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக, கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். தேவலோகத்தை இன்னல்கள் சூழ ஆரம்பித்தது. இந்திரன் முதலான தேவர்களை பலவாறு துன்புறுத்திய மகிஷன், அவர்களை விரட்டியடித்துவிட்டு தேவ லோகத்தைக் கைப்பற்றினான்.
பரிதவித்துப்போன இந்திரன், பிரம்மதேவரை சந்தித்தான். அவருடன் சென்று சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடமும் சரணடைந்தான். மும்மூர்த்தியரின் சக்திகளும் ஒன்றுகூடி உருவானவளே துர்கை. தனது திருக்கரங்களில்...ஈசனின் சூலம், விஷ்ணுவின் சக்ராயுதம், பிரம்மனின் கமண்டலம், இந்திரனின் வஜ்ராயுதம், அக்னி-வருணன் ஆகியோரின் சக்தி, வாயு பகவானின் வில், ஐராவதத்தின் மணி, எமதருமனின் தண்டம், நிருதி தேவனின் பாசம், காலனின் கத்தி-கேடயம் ஆகியவற்றை ஏந்தி நின்றாள் தேவி. அத்துடன், சமுத்திர தேவன் தாமரை மலரையும், குபேரன் பாணங்கள் நிறைந்த பாத்திரத்தையும், ஹிமவான் சக்தி மிக்க சிம்மத்தை வாகனமாகவும், சூரிய தேவன் தேக காந்தியையும், இன்னும் பிற தேவர்கள் பல்வேறு ஆடை-ஆபரணங்களையும் அளித்ததால், சர்வலங்கார பூஷணியாக திகழ்ந்தாள் ஸ்ரீதுர்கா.
மகிஷாசுரன் பெற்றிருந்த வரத்தின்படி, அந்த அசுரன் எந்தப் பெண்ணை மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும். துர்காதேவி அசுரனைத் தேடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றாள். அவளது அழகைக் கண்டு மோகித்தான் மகிஷன்; தன்னை மணக்கும்படி வேண்டினான். யுத்தத்தில் என்னை ஜெயித்தால், உன்னை மணக்கிறேன் என நிபந்தனை விதித்தாள் தேவி. யுத்தம் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரன் கொல்லப்பட்டான். தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையின் மீது பூமாரி பொழிந்தனர். மகிஷனின் தலையின் மீது ஏறி நின்று, மகிஷனாக வந்த வர முனிக்கும், தேவர்களுக்கும் திருவருள் புரிந்தாள் தேவி. தேவி துர்கையின் வெற்றியைக் கொண்டாடிய திருநாளே விஜயதசமி. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய துர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவார்கள். புரட்டாசி மாதம், வளர்பிறை பிரதமை துவங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. கடைசி (10-வது) நாள் விஜயதசமி! இந்த நிகழ்வுகளையெல்லாம் பொம்மைகளாக வைத்து சித்திரிப்பதே கொலு வைபவமாகப் பரிணமித்தது. வடநாட்டில், ஸ்ரீராமனின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ஸ்ரீராமர், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததைப் போற்றும் விழாவாக, ஸ்ரீராமனின் வெற்றி விழாவாகக் கொண்டாடப்படுகிறது விஜயதசமி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment