Friday, September 30, 2011

navarathiri third day (30-09-2011) valipadu

நாளை அம்பிகையை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை கிரீடம், முதுகுத்தண்டு போன்ற வடிவுடைய வஜ்ராயுதம் ஆகியவற்றுடன், யானை வாகனத்தில் அமர்த்தி அலங்கரிக்க வேண்டும். பெரிய பதவிகள், நல்ல வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்க இவளிடம் வேண்டிக்கொள்ளலாம். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். மீனாட்சியம்மன் மீது குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். இதில் வருகைப்பருவம் பகுதியில் அமைந்த ஒன்பதாவது பாடலான தொடுக்கும் கடவுட் பழம்பாடல் என்று தொடங்கும் பாடலைப் பாடும்போது மீனாட்சி ஒரு சிறுமியாக வந்தாள். திருமலைநாயக்கரின் கழுத்தில் இருந்த முத்துமாலையை கழற்றி, குமரகுருபரருக்கு சூட்டி விட்டு சந்நிதிக்குள் ஓடி மறைந்தாள். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண்குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை ஊசல் பருவம் என்று குறிப்பிடுவர். பிள்ளைத்தமிழ் பருவங்களின் அடிப்படையில் ஐப்பசியில் மீனாட்சிக்கு கோலாட்ட விழா நடக்கும். அப்போது அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டியபடியே, கன்னிப்பெண்கள் கோலாட்டம் ஆடுவர். நவராத்திரியின் மூன்றாம் நாளான நாளையும் மீனாட்சி ஊஞ்சலில் ஆடுகிறாள். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக காட்சி தருகிறாள். அன்னையின் அருள்பெற ஊஞ்சல் பாடலைப் பாடி மகிழ்வோம்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்

பாட வேண்டிய பாடல்:

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!

Thursday, September 29, 2011

navarathiri second day (29.09.11) valipadu

நாளை அம்பிகையை வராஹியாக அலங்கரித்து வழிபடவேண்டும். வராஹ (பன்றி) முகம் கொண்டவளாகவும், தெத்துப் பற்களால் பூமிப்பந்தை தாங்குவது போலவும் அலங்கரிக்க வேண்டும். கைகளில் சூலம், உலக்கை ஆகிய ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும். இவளை வணங்கினால், போட்டி பொறாமையால் தொந்தரவு தரும் எதிரிகளிடம் இருந்து விடுதலை பெறலாம். நாளை மதுரை மீனாட்சியம்மன், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. அம்மனும், சுவாமியும் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் பெருமை மதுரைக்குரிய சிறப்பாகும். சித்திரை தொடங்கி ஆடி வரை மீனாட்சியும், ஆவணி முதல் பங்குனி வரை சொக்கநாதரும் அரசாட்சி செய்வதாக ஐதீகம். பிருங்கி முனிவர், சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை கயிலையில் சிவனும், அம்பிகையும் அமர்ந்திருந்த போது, இவர், சிவபெருமானை மட்டும் தனித்து வலம் வந்து வணங்கினார். அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன், தேவியை நெருங்கி அமர்ந்தார். ஆனால், முனிவர் வண்டாக உருவெடுத்து சிவபார்வதிக்கு நடுவில் புகுந்து, இறைவனை மட்டும் வலம் வந்தார். கோபத்தில் பார்வதி பிருங்கிமுனிவரின் சக்தி அனைத்தையும் வற்றச் செய்தாள். ஆனாலும், பிருங்கி சிவனருளால் மூன்றாவது காலும், ஊன்றுகோலும் பெற்றுக் கொண்டு தனது இயக்கத்தைத் தொடர்ந்தார். சிவனுக்கு சமம் சக்தி என்பதை உணர்த்து வதற்காக, அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன்பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். ஆண்பாதி, பெண்பாதியாக இணைந்து காட்சியளித்த இக்கோலமே அர்த்தநாரீஸ்வரர் ஆகும். "அர்த்தம் என்றால் "பாதி, "நாரி என்றால் "பெண். "அர்த்தநாரி என்றால் ஈஸ்வரனில் பாதியாக இணைந்த பெண். இந்த வடிவத்தைத் தரிசித்தால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும். நாளை அர்த்த நாரீஸ்வர வடிவில் மீனாட்சியை வணங்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

நாளைய நைவேத்யம்: தயிர் சாதம்

பாட வேண்டிய பாடல்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம.

sri neervanna perumal temple

சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. ‘மாமலையாவது திருநீர்மலையே’ என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

தல வரலாறு
ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.

இத்தலத்துள்ள பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் “நீர்வண்ணப்பெருமாள்,” இருந்த கோலத்தில் “நரசிம்மர்,” சயன கோலத்தில் “அரங்கநாதர்,” நடந்த கோலத்தில் “உலகளந்த பெருமாள்” என நான்கு கோலங்களையும் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை ‘மேலே’ அனுப்பிய பாவம் போக்க , அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல! காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!

மூன்று யுகங்களில் தேவர்களும் ரிஷிகளும் செய்த யாகங்களால் அக்னிபகவானுக்கு ஆஹுதி கூடிப்போய் வயிறு மந்தமாகிப் போனது. பெருமாளிடம் போய் முறையிட்டார். அவர் காண்டீபவனத்தில் போய் பச்சிலை மூலிகைகள் எடுத்து சாப்பிட்டால் வயிறு சரியாகுமென்று கூறி அனுப்பினார். சீக்கிரம் உடம்பு குணமாக வேண்டுமே என்று ஒரு இலைவிடாமல் பிடுங்கித் தின்றார் அக்னி பகவான். இதனால் அந்த இடம் பொட்டல் காடானது. வெப்பாலை மரங்கள் மட்டுமே மீதம் இருந்தது. இதுதான் இங்கே ஸ்தல விருட்சமும் கூட. சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்து இது! மரங்கள் இல்லாததால் வனத்தில் உஷ்ணம் தகிக்க ஆரம்பித்தது. அங்கே தவமிருந்த ரிஷி முனிவர்களால் தாங்க முடியவில்லை. அவர்களும் நாராயணனிடத்தில் சென்று முறையீடு செய்தார்கம்ள். பெருமாள் வருண பகவானை அழைத்து அங்கே மழை பொழியச் சொன்னார். வருண பகவான் மழையை பொழிந்து தள்ளினார். மலையே மூழ்கும் அளவுக்கு மழை!

கோவில் அமைப்பு
காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.

கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி மற்றும் ’கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.

உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது. அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். கருவறைப் படிக்கட்டின் இரண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப் பெண்டிர் சிலைகள் உள்ளன.

பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.

பெருமாளின் பலவித சயனக்கோலங்களில் இங்கே மாணிக்க சயனம்.

1. ஜல சயனம் – திருப்பாற்கடல்
2. தல சயனம் – மல்லை
3. புஜங்க சயனம் (சேஷசயனம்) – திருவரங்கம்
4. உத்தியோக / உத்தான சயனம் – திருக்குடந்தை
5. வீர சயனம் – திருஎவ்வுள்ளூர்
6. போக சயனம் – திருச்சித்ரகூடம் (சிதம்பரம்)
7. தர்ப்ப சயனம் – திருப்புல்லாணி
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) – ஸ்ரீவில்லிபுத்தூர்
9. மாணிக்க சயனம் – திருநீர்மலை.

தனிச்சந்நிதியில் தாயார் ரங்கநாயகி உள்ளார். உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது. இவரைச் ‘சாந்த நரசிம்மர்’ என்றும் சொல்கிறார்கள். ஹிரண்யவதம் முடிந்ததும் கோபம் அடங்காமல் சிலிர்த்த உடலோடு நின்ற சிம்ஹத்தைக் கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும் ‘ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே’ என்று இரக்கம் தோன்ற, அவனுக்குச் சமமாக, அவனுக்கேற்ற உருவத்தில் தானும் குழந்தையாக மாறி இரண்டு கைகளுடன் இங்கே வீற்றிருக்கிறார். இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.

கிழக்கே உலகளந்தப் பெருமாள் சந்நிதி உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை ஒட்டி த்ரிவிக்ரமன் உள்ளார். மகாபலியின் தலையில் மூன்றாவது அடி வைத்தவர். வைகாசி மாதம் திருவோண நக்ஷத்திர தினத்தில் இவருக்குத் தனி உற்சவம் நடத்தப்படுகிறது.

இக்கோயிலில் மூலவர் அரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சுயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவருக்குத்தான். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

கீழே உள்ள கோவிலில் நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு முன் அழகான அஞ்சுநிலைக் கோபுரத்துடன் கூடிய முன்வாசல் உள்ளது.

வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்த பின் இங்கே வந்து ராமனை மனம் உருகப் பிரார்த்தனை செய்து ராமனின் கல்யாண உருவத்தைக் காட்ட வேண்ட அப்படியே எழுந்தருளினாராம் இறைவன். ராமர் சீதை, லக்ஷ்மண, பரத சத்ருக்கனர் மட்டுமே உள்ள சந்நிதி இது. கல்யாணத்தின் போது அனுமன் இல்லையென்பதால் அனுமனுக்கு தனியாக மண்டபத்தில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்.

உள்ளே நுழைந்ததும் ப்ரகாரத்தின் வலதுபக்கம் நீர்வண்ணனின் சந்நிதி. திருமங்கைஆழ்வார் மங்கள சாஸனம் செய்துள்ளார். அந்த பத்தொன்பது பாசுரங்கள் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. பூதத்தாழ்வாரும் பாடி மங்களசாஸனம் செய்திருக்கிறார். ரங்கநாதர் சந்நிதி ஒன்றும் உள்ளது. தாயார் பெயர் அணிமாமலர் மங்கை. ஒரு விஸ்தாரமான மண்டபத்தில் ஆண்டாள் சந்நிதி உள்ளது.

பங்குனி மற்றும் சித்திரை என வருடத்திற்கு இரண்டு தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மலைக்கோயிலில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோத்சவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவாரக் கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் அரங்கநாதர், அரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.

கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் அரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தைமாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு அரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாகத் தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார். இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, “முக்கோட்டி துவாதசி” என்று அழைக்கிறார்கள். கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் இராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகித் தனியே உள்ளது.

இத்தலத்தின் குளத்தில் நீராடி, பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிவலம் செய்தும் வழிபடுகின்றனர்.

சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இங்கே ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறுகிறது.

சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

தொடர்பு கொள்ள:
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்,
திருநீர்மலை – 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.
பேசி: +91- 44-22385484, 9840595374, 9444020820

swami nellaiapper kanthimathi temple tirunelveli

swami nellaiapper kanthimathi temple tirunelveli

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. திருநெல்வேலி ஜங்சனிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற 14 தேவாரத் தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும்.

இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். நெல்லையப்பர் கோயில் இரு மூலவரைக் கொண்ட “துவிம்மூர்த்தி’ என்ற வகை கோயிலாகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். காந்திமதி அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இக் கோயிலின் தலமரம் மூங்கில் ஆகும். 32 தீர்த்தங்களைக் கொண்ட இக் கோயிலில் பொற்றாமரை, கருமாறி, வைரவ தீர்த்தம், சர்வதீர்த்தம், கம்பை, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குத்துறை உள்ளிட்ட 9 தீர்த்தங்கள் முக்கியமானவை.

தல வரலாறு
பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அக் கால கட்டத்தில் வேணுவனமாகக் காட்சியளித்த திருநெல்வேலியில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பயன்படுத்தி வந்தார். ஒரு நாள் இவ்வாறு பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்துவிடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் இருந்தும் நெல்லை கொண்டு செல்லாதபடி இருப்பதையும், நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். நெல்வேலி தற்போது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. நெல்வேலி நாதர் நாளடைவில் நெல்லையப்பர் என அழைக்கப்படலானார். இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் உள்ள அம்பாளம் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோயிலின் மூலக்கதை

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

கோயிலின் அமைப்பு

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதற்கு மேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். அடுத்து உள்ளே சென்றால் மிகப்பெரிய (சுமார் 9 அடி) ஆனைமுகன் வீற்றிருக்கிறார். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.

இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும். இப்பிரகாரத்திலிருந்து தான் அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இங்குதான் உள்ளது. வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் “தங்கப்பாவாடை” சார்த்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.

மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்றவாக்கில் இருப்பார். அங்கும் மிகப் பெரிய மண்டபம் உள்ளது. இங்கும் விளக்குப் பூஜைகள் நடைபெறும். அதையடுத்து மேற்கு வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிற விநாயகரும், மேற்குவாசலும் வரும். அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற திறந்தவெளியரங்கம் ஒன்று உள்ளது. அதன் அருகில் யானை இருக்கும். அதன்பின் நவக்கிரகங்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று பக்தர்கள் எள்விளக்கு ஏற்றிப்போட அகண்ட கிழி இருக்கும்.

இக் கோயிலில் மாதம் ஒரு திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்பாகும். இதில் முக்கியமாக ஆனிப் பெரும் திருவிழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொன்று தொட்டு நடைபெறுகிறது. இத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய தேர் இழுக்கப்படும். இத் தேருடன் 5 தேர்கள் இழுக்கப்படும். மேலும், இக் கோயிலில்தான் நடராஜ பெருமான் திருநடனம் புரியம் தாமிரசபை உள்ளது. இந்த சபையில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவின் கடைசிநாளன்று நடராஜபெருமான் திருநடனம் புரியும் வைபவம் நடைபெறுகிறது. இதே போல, ஐப்பசி மாதம் நடைபெறும் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். மேலும் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகிறது.

சுவாமி நெல்லையப்பர் கோயில் பல கட்டங்களில், பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டிருக்கிறது.

சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதே போல, சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது வேண்டுதல் நிறைவேற, சங்கடஹர சதுர்த்தியன்று பொல்லாப்பிள்ளையாருக்கு 11 வகையான அபிஷேகம் செய்து, மோதகம் வைத்து, அருகம்புல் மாலை சூடி வழிபட்டால், அத் தம்பதியின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். இதே போல, 41 நாள்கள் தொடர்ந்து கணவரும், மனைவியும் தொடர்ந்து பக்தி சிரத்தையுடன், அர்ச்சனை செய்து வழிப்பட்டால் குழந்தை வரம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சுவாமி நெல்லையப்பரைத் தரிசிக்க விமானம் மூல வர விரும்புகிறவர்கள் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலமாகவோ, பஸ் மூலமாகவோ ஆலயம் வரலாம். ரயில் மூலம் வருகிறவர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பஸ் மூலமாகவோ அல்லது வேறு வாகனங்கள் மூலமாகவோ கோயிலுக்கு வரலாம்.

கோயிலில் காலை 6.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7.30 மணிக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு சிறுகாலச் சந்தி, 9.30 மணிக்கு காலசந்தி ஆகியவை நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அர்த்த சாமம், இரவு 8.40 மணிக்கு சொக்கர் தீபாராதனை, 9.30 மணிக்கு வைரவர் பூஜை ஆகியவை தினமும் நடைபெறும்.

மேலும் விவ்ரங்களுக்கு
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில், திருநெல்வேலி.
தொலைபேசி: +91-462-2339910

Wednesday, September 28, 2011

நவராத்திரி முதல் நாள்(28.09.11) வழிபாடு!

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகைக்கு உரியவை. முதல்நாளில், அவளை சாமுண்டியாக அலங்கரித்து வழிபட வேண்டும். முண்டன் என்னும் அசுரனை சம்ஹரித்தவள் இவள். சாமுண்டா என்றும் இவளை அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. கோபம் இல்லாத அரசனிடம் குடிமக்கள் அஞ்சமாட்டார்கள். மன்னனிடம் மக்கள் பயப்படவில்லை எனில் அவனால் நீதியை காப்பாற்ற முடியாது. எனவே, நீதியை காக்க இவள் கோபமாக இருக்கிறாள். இவளை "ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். ராஜராஜனான சிவபெருமானுக்கே தலைவியாக இருந்து நம்மை பரிபாலிப்பவள் அம்பிகை. அதனால் தான் அவளுக்கு "ராஜராஜேஸ்வரி என்ற திருநாமம் உண்டானது. அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துகிறாள். தவறு செய்யும் போது மகாராணியைப் போல் கண்டிக்கிறாள். அதே சமயத்தில் தன் குழந்தைகளின் மீது பரம காருண்யத்தோடு பேரருளையும் பொழிகிறாள். நவராத்திரி முதல் நாளான நாளை, ராஜ ராஜேஸ்வரியை பக்தியோடு பூஜித்து மகிழ்வோம். நாளைய நைவேத்யம்சர்க்கரைப் பொங்கல் பாட வேண்டிய பாடல் அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே ஆலவாய் ÷க்ஷத்திர ஒளியே உமையே வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனிநீயே வைகைத் தலைவியே சரணம் தாயே.

நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம

ஸ்ரீசரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம.



நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது?




அகிலம் அனைத்தையும் படைத்தவளும், அதை ரட்சிப்பவளும் சாட்சாத் அந்த ஆதிபராசக்தியே ! பொற்கரங்கள் பதினெட்டும், ஒளி வீசும் திருமுகமும் துலங்க, எல்லோருடைய அதிதேவதையாகவும் திகழும் அந்த துர்காதேவியே மகிஷாசுரமர்த்தினியாகவும் சண்டிகாவாகவும்... இன்னும் பற்பல திருநாமங்களில்- திருவடிவங்களில்.. நம்மைக் காக்க அவதாரம் எடுத்து வந்தாள் என்கின்றன புராணங்கள். பரசுராமர், ஸ்ரீராமர், கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களே துர்காதேவியை வழிபட்டு, தேவி வழிபாட்டின் சிறப்பை நமக்குத் தெரியப்படுத்தி உள்ளனர். வரமுனி என்றொரு முனிவர் இருந்தார். மிதமிஞ்சிய அவரது கர்வத்தின் காரணமாக, கடும் சாபம் பெற்றார். அதன் விளைவு, முனிவர் மகிஷனாக மாறினார். தேவலோகத்தை இன்னல்கள் சூழ ஆரம்பித்தது. இந்திரன் முதலான தேவர்களை பலவாறு துன்புறுத்திய மகிஷன், அவர்களை விரட்டியடித்துவிட்டு தேவ லோகத்தைக் கைப்பற்றினான்.

பரிதவித்துப்போன இந்திரன், பிரம்மதேவரை சந்தித்தான். அவருடன் சென்று சிவனாரிடமும் மகாவிஷ்ணுவிடமும் சரணடைந்தான். மும்மூர்த்தியரின் சக்திகளும் ஒன்றுகூடி உருவானவளே துர்கை. தனது திருக்கரங்களில்...ஈசனின் சூலம், விஷ்ணுவின் சக்ராயுதம், பிரம்மனின் கமண்டலம், இந்திரனின் வஜ்ராயுதம், அக்னி-வருணன் ஆகியோரின் சக்தி, வாயு பகவானின் வில், ஐராவதத்தின் மணி, எமதருமனின் தண்டம், நிருதி தேவனின் பாசம், காலனின் கத்தி-கேடயம் ஆகியவற்றை ஏந்தி நின்றாள் தேவி. அத்துடன், சமுத்திர தேவன் தாமரை மலரையும், குபேரன் பாணங்கள் நிறைந்த பாத்திரத்தையும், ஹிமவான் சக்தி மிக்க சிம்மத்தை வாகனமாகவும், சூரிய தேவன் தேக காந்தியையும், இன்னும் பிற தேவர்கள் பல்வேறு ஆடை-ஆபரணங்களையும் அளித்ததால், சர்வலங்கார பூஷணியாக திகழ்ந்தாள் ஸ்ரீதுர்கா.

மகிஷாசுரன் பெற்றிருந்த வரத்தின்படி, அந்த அசுரன் எந்தப் பெண்ணை மோகிக்கிறானோ, அவளால்தான் அவனுக்கு மரணம் நிகழும். துர்காதேவி அசுரனைத் தேடி அவனது இருப்பிடத்துக்குச் சென்றாள். அவளது அழகைக் கண்டு மோகித்தான் மகிஷன்; தன்னை மணக்கும்படி வேண்டினான். யுத்தத்தில் என்னை ஜெயித்தால், உன்னை மணக்கிறேன் என நிபந்தனை விதித்தாள் தேவி. யுத்தம் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நிகழ்ந்த யுத்தத்தின் முடிவில், மகிஷாசுரன் கொல்லப்பட்டான். தேவர்களும் ரிஷிகளும் அம்பிகையின் மீது பூமாரி பொழிந்தனர். மகிஷனின் தலையின் மீது ஏறி நின்று, மகிஷனாக வந்த வர முனிக்கும், தேவர்களுக்கும் திருவருள் புரிந்தாள் தேவி. தேவி துர்கையின் வெற்றியைக் கொண்டாடிய திருநாளே விஜயதசமி. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய துர்கையின் மகாத்மியத்தைப் போற்றுவதே நவராத்திரி வைபவம். முதல் மூன்று நாட்கள் துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவார்கள். புரட்டாசி மாதம், வளர்பிறை பிரதமை துவங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது நவராத்திரி. கடைசி (10-வது) நாள் விஜயதசமி! இந்த நிகழ்வுகளையெல்லாம் பொம்மைகளாக வைத்து சித்திரிப்பதே கொலு வைபவமாகப் பரிணமித்தது. வடநாட்டில், ஸ்ரீராமனின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ஸ்ரீராமர், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததைப் போற்றும் விழாவாக, ஸ்ரீராமனின் வெற்றி விழாவாகக் கொண்டாடப்படுகிறது விஜயதசமி.

Friday, September 9, 2011

பதினாறு வகை காயுடன் பாயச விருந்து



கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் மலையாள மொழிபேசும் மக்கள் வாழும் ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவோணம் தினத்தன்று பாதாள உலகத்தில் இருந்து மகாபலி மன்னன் மலையாள மக்களைக் காண வருகிறார் என்பது ஐதீகம். இதற்காக ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை பத்து நாட்களும் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு விளக்கேற்றி மகாபலி மன்னரை வரவேற்க தயாராகின்றனர் மலையாள மக்கள்.

இன்றைக்கு திருவோணத்தை ஒட்டி சென்னையில் மலையாள மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாலை முதலே ஓணம் பண்டிகை களை கட்டியது. வீடுகளை அலங்கரித்த மக்கள் அத்தப் பூ கோலமிட்டு அதன் மீது விளக்கேற்றி வழிபட்டனர். புத்தாடை அணிந்து கொண்டு உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சிறப்பு வாய்ந்த ஒணசத்ய எனப்படும் விருந்தளித்தனர்.

ஓணவிருந்து

தலைவாழை இலை பரப்பி அவியல், எரிசேரி, கூட்டு, வாழைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும், இஞ்சிப்புளி, உப்பு, பப்படம் வைத்து பின்னர் சோறுடன் பருப்பும் நெய்யும் ஊற்றி முதல் ஈடு சாப்பிட பரிமாறினர். இதனையடுத்து கேரளாவின் சிறப்பு வாய்ந்த பூசனிக்காய் சாம்பார், தேங்காய் ரசம், ஆகியவையும் உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசம் பரிமாறினர். இதுவே திருப்தியாக இருக்கையில் மோர்க்குழம்பும் உண்டு விருப்பப்பட்டால் அதனையும் சாப்பிடலாம். அதுதான் உண்ட உணவு செரிமானம் ஆக இஞ்சிப்புளி வைக்கின்றனரே இதனுடன் இனிப்பும் கொடுத்து ஓணத்தை உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.

கோவையில் கொண்டாட்டம்

மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் கோவையிலும் ஓணம் கொண்டாட்டம் களை கட்டியது. அதிகாலையிலேயே எழுந்து தங்களை காண வரும் மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப் பூ கோலமிட்டு அதன் மீது விளக்கேற்றி வழிபட்டனர். புத்தாடை அணிந்து கொண்டு கோலத்தைச் சுற்றி திருவாதிரை நடனமாடியும், ஊஞ்சல் கட்டி ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

மக்களை காண வந்த மகாபலி

கேரளமாநிலத்தின் எல்லையில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி பதினாறு வகை காய்களுடன் கூடிய விருந்து சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்ந்தனர். பாரம்பரியம் மிக்க நடனம் ஆடியும் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை கொடுத்தும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மகாபலி மன்னரைப்போல வேடமணிந்தவர் வீடுதோறும் சென்று மகிழ்ச்சியுடன் வசிக்கும் மக்களுக்கு ஆசிர்வாதம் கூறியது சிறப்பம்சமாகும். ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை, கோவை, குமரி, திருப்பூர் உள்ளிட்ட மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பத்து நாட்களும் ஓணம் பண்டிகை வசந்த விழாவாகவும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Friday, September 2, 2011

வந்தது ஓணம்-அத்தப் பூ கோலமிட்டு மகாபலிக்கு வரவேற்பு


கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. "அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு.

ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

மகாபலி மன்னனும் வாமனனும்

ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னாக பிறந்து சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தான்.

மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் எந்த துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.

அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன் மகாபலியின் அரண்மனைக்குச் சென்று தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம்தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன் குரு சொன்னதை கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான்.

அந்த சமயத்தில் மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார். அப்படி தன் மக்களை காண மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவே மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

ஓண சத்ய விருந்து

ஓண சத்ய எனப்படும் ஓணவிருந்தில் பரிமாறப்படும் பலகார வகைகளை கேட்டாலே வயிறு நிறைந்து விடும். கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கரி ஆகியவற்றை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும். பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்ணுவார்கள். பின்னர் சாம்பார் சேர்த்து உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசாத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். பின் புளுசேரி கூட்டி, இன்னொரு சுவை, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறு நிறைந்துவிடும்.

கும்மி கொட்டி விளையாட்டு

விருந்துண்ட பின்பு பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு கோலத்தை சுற்றி கும்மி கொட்டுவர். பின்னர் வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டியும், பந்துகள் விளையாடியும் மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடுகின்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு மீண்டும் பாதள லோகம் செல்கின்றார் என்பது புராணகதை.

புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. மலையாள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இது கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும்.

Thursday, September 1, 2011

அன்பை அருளும் ஆனைமுகத்தோன்


விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.

எளிமையின் நாயகன்

விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

விநாயகரின் தோற்றம்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்றிருந்த போது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது. அவ்வுருவத்தை பிள்ளையென பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு நீராடச் சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவன் பிள்ளையாரின் சிரத்தை கொய்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் வெளியே வந்த பார்வதி தேவி சிரச்சேதமுற்றுக் கிடந்த பிள்ளையார் கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.

வடதிசையில் இருந்த இறைவன்

காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என பெயரிட்டு தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது ஒரு ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியாகும். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் களி மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபடுவது சிறப்பு.

இருபத்தியோருபேறுகள்

விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோம்.