குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் !
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும்
வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில்
பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.
குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான
அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல
வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும்
பாதிக்கப்படுவர்.
உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம்
பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப்
பொருட்களில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் பால், பருப்பு,
பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல்
ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கொழுப்பு பால், வெண்ணெய், நெய்,
இறைச்சி, சமையல் எண்ணெய்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஒரு வயதுக்கு
மேற்பட்ட குழந்தையின் உணவில் நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய்கள் போன்றவற்றை
அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
மாவுப் பொருட்கள் உடலுக்குத்
தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அரிசி, கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றில்
மாவுப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அரிசிச் சோறு, கோதுமை மற்றும் வேறு
தானியங்களில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றை குழந்தையின்
உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக, சிறு
குழந்தைகளின் உணவில் மாவுப் பொருள், கொழுப்பு ஆகியவற்றை விட புரதச் சத்து
நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே
சமயம், மாவுப் பொருட்கள், கொழுப்பு ஆகியனவும் குழந்தைகளுக்கு போதுமான
அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதைத் தவிர
கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு போன்ற சில தாதுப் பொருட்களும்
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. கால்சியமும்,
பாஸ்பரஸூம் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும்
அவசியம். இரும்பு, செம்பு போன்றவை இரத்த விருத்திக்கு தேவைப்படுகின்றன.
பால், அவரைக்காய் போன்றவற்றில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. உப்பு,
பால், கோழி, இறைச்சி போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. கீரை,
அவரைக்காய், பட்டாணி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.
சிறு குழந்தைகளின் தினசரி உணவில் மீன் எண்ணெய், பழரசம், பருப்பு, நெய்,
கீரை, காய்கறிகள், அரிசியுடன் கோதுமை, கேழ்வரகு போன்றவற்றையும் போதிய
அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, வாழைப்பழம்
போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றையும் தினமும் கொடுக்கலாம்.
மேலே
குறிப்பிட்டுள்ள உணவுச் சத்துக்கள் தவிர வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்
சத்துகளும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமாக
தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் பொதுவாக ஏ, பி, சி, டி, இ, கே என்னும்
ஆங்கில எழுத்துகளுடன் அழைக்கப்படுகின்றன.
தோல், தொண்டை,
மூச்சுக்குழல், கண் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வைட்டமின்
ஏ உதவுகின்றது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் சளித் தொல்லைகள்
ஏற்படும். மாலைக்கண் நோய் ஏற்படும். இந்த நிலை முற்றினால் முழுமையான பார்வை
இழப்பும் ஏற்படலாம்.
கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின்
பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய், கீரை, பழங்கள், காரட் போன்றவற்றில்
அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள
வேண்டும். அதோடு, 10 வயது வரையிலும் குழந்தைக்கு தினமும் ஒரு வேளை இரண்டு
தேக்கரண்டி மீன் எண்ணெய் கொடுப்பது நல்லது.
வைட்டமின் பி என்பது
12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு. பி வைட்டமின்களில் ஒன்றான தையமின்
பற்றாக் குறையினால் “பெரி பெரி” என்னும் நோய் ஏற்படும். கால்களில்
குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை அந்த நோயின் அறிகுறிகளாகும்.
பழங்கள், ஈஸ்ட், முளைகட்டிய கொண்டைக்கடலை, பயறு, உளுந்து, அரிசித் தவிடு,
பச்சைக் காய்கறிகள், முட்டை, கல்லீரல் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக
உள்ளது.
மற்றொரு பி வைட்டமினான நிக்கோடினிக் அமிலம்
பற்றாக்குறையினால் பெல்லாகிரா என்னும் நோய் ஏற்படும். பால், முட்டை,
ஆட்டுக் கல்லீரல் ஆகியவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. பல்,
ஈறு, இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் “சி”
தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் “ஸ்கர்வி” என்னும் நோய்
ஏற்படுகின்றது. ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, காலி பிளவர், பட்டாணி,
நெல்லிக்காய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் “டி” தேவைப்படுகிறது. இந்த
வைட்டமின் பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. பால்,
வெண்ணெய், முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக
உள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நோய்களைத்
தடுக்க வைட்டமின் “கே” தேவைப்படுகிறது. மீன் எண்ணெயில் இந்த வைட்டமின்
அதிகமாக இருக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு:
தாயார்
கர்ப்பமாக இருக்கும் போது கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கவும், கருப்பையில்
வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவும் வைட்டமின் இ தேவைப்படுகிறது. பால்,
முளை கட்டிய பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் உள்ளது.
ஸ்கர்வி:
வைட்டமின் சி பற்றாக்குறையினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகின்றது.
பிறந்த எட்டு மாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த நோய்
அதிகமாக பாதிக்கின்றது.
அறிகுறிகள்:
ஆரம்பத்தில்
குழந்தைக்கு பசி இருக்காது. குழந்தையை எடுக்கும் போதும், கீழே விடும்
போதும் குழந்தையின் கை, கால்களில் உள்ள எலும்புகளில் தாயின் கைபட்டு
அதிர்ச்சி ஏற்படுவதால், குழந்தை வலி தாங்காமல் வீரிட்டு அழும். பல்முளைத்த
குழந்தையானால் பற்களைச் சுற்றியுள்ள ஈறு வீங்கி நீலநிறத்துடன் காணப்படும்.
சிகிச்சை:
நோய் வந்த பின்னர் தினமும் மூன்று வேளைகளும் வைட்டமின் சி மாத்திரைகள்
வேளைக்கு 50 மி.கிராம் அளவு கொடுத்து வந்தால் விரைவில் நோய் குணமாகிவிடும்.
அத்துடன் தினமும் இரண்டு வேளை பழரசம் கொடுக்கலாம்.
குழந்தையை
அடிக்கடி கையில் எடுக்கக் கூடாது. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுக்க வைக்க
வேண்டும். இந்த நோய்க்கு சொந்தமாக சிகிச்சை அளிப்பதை விட மருத்துவரிடம்
காட்டி சிகிச்சை அளிப்பது தான் சிறந்தது.
ரிக்கெட்ஸ்:
வைட்டமின் “டி” பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது.
உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறையானாலும், சூரிய வெளிச்சம் படாமல்
வளர்த்ததாலும் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகின்றது.
அறிகுறிகள்:
பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில்
குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கும். குழந்தையின் தலை அடிக்கடி
வியர்வையினால் நன்கு நனைந்து விடும். தாயார் தன் மீது போர்வையை
போர்த்தினால் அதை விலக்கித் தள்ளி அழும். மார்பு எலும்புகளின் ஓரம்
உத்திராட்ச மாலை போல பருத்து விகாரமாகிவிடும். பல் முளைக்கும் பருவம்
தாண்டி பல மாதங்களான பின்னர் கூட பல் முளைக்கும் அறிகுறி கொஞ்சம்கூட
இல்லாமல் வாய் பொக்கையாக இருக்கும்.
உடலில் உள்ள எலும்புகள்
அனைத்தும் பலவீனமாகி விடும். இதனால் நடக்கும் பருவத்துக் குழந்தைகளின் கால்
எலும்புகள் வளைந்து போகும். முட்டிகள் தட்டும். இடுப்பு எலும்புகள்
இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகி விடும்.
பெண்
குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டு இடுப்பு எலும்புகள் இதபோல
குறுகிவிட்டால், பின்னர் அவர்கள் வளர்ந்து கர்ப்பமாகும்போது பிரசவம்
மிகவும் கஷ்டமானதாகி விடும். ரிக்கெட்ஸ் நோயினால் மற்ற எலும்புகளும் உறுதி
குன்றும். சாதாரணமாக, ஆரோக்கியமான குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி
என்னும் பள்ளம் குழந்தை பிறந்த 18வது மாதத்திற்குள் நன்றாக மூடிக் கொண்டு
விடும். ஆனால், ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு
வயதான பின்னரும் உச்சிக் குழி மறையாது.
ரிக்கெட்ஸ் நோய் குடலை
அதிகமாக பலவீனப்படுத்தி விடுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜீரணக்
குறைபாடுகள் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை பருத்து வயிறு பானை போல
முன்னால் தள்ளிக் கொண்டிருக்கும். மூச்சு விட சிரமப்படும். சளி, இருமல்
ஆகியவை அடிக்கடி ஏற்படும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதால் இந்தக்
குழந்தைக்கு வலிப்பு நோய் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.
சிகிச்சை:
வருமுன் தடுப்பதுதான் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சை. தாய்ப்பால்
கொடுத்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். புட்டிப் பால் கொடுத்தால்
குழந்தைக்கு கூடுதலாக வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரண்டு வேளைகள் குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுக்க வேண்டும். நல்ல
சூரிய வெளிச்சத்தில் குழந்தையை தினமும் விளையாட விட வேண்டும். நல்ல
சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக
சந்தேகப்பட்டால், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை
அளிக்க வேண்டும்.
நன்றி
பரமக்குடி சுமதி
No comments:
Post a Comment