Saturday, August 13, 2011
சகோதரிகள் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழா கொண்டாட்டம்
சென்னை: உடன் பிறவாவிட்டாலும், சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்ஷாபந்தன் விழாவை இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டு இந்தியர்களிடையேயும் சகோதர அன்பை பகிர்ந்துக் கொள்ள அன்பின் பிணைப்பாக கட்டப்படுவது, ராக்கி. ராக்கி கயிறுகளை ஆண்களின் கைகளில் பெண்கள் கட்டுவார்கள். இதன் மூலம் அந்த ஆண், ராக்கி கட்டிய பெண்ணுக்கு சகோதரன் முறையாகிவிடுகிறான்.
வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழா, தமிழகத்திலும் சமீபக்காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஆவணி மாத துவக்கத்தில் வரும் பவுர்ணமி அன்று இது கொண்டாடப்படுகிறது.
ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, மகாபலியின் தீவிர பக்தியில் அகம் குளிர்ந்த விஷ்ணு, என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு மகாபலி, தனது நாட்டை விஷ்ணு தான் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தான். அதையேற்றுக் கொண்ட விஷ்ணு, வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.
கணவனை காணாத லட்சுமி, மகாபலியின் நாட்டிற்கு வந்தார். அங்கு காவலனாக இருந்த கணவனை காப்பாற்ற லட்சுமி ஏழை பெண்ணாக உருமாறினார். பின்னர் மகாபலியிடம் சென்று ஒரு கயிறை கட்டிவிட்டு, தனது நிலையை கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியடைந்த மகாபலி, விஷ்ணுவை அனுப்பி வைத்தான். இந்த கயிறே பின்னாளில் ராக்கி கயிறாக மாறியதாக கூறப்படுகிறது.
ராக்கி கட்டும் போது, சகோதரரின் சுக வாழ்விற்காக சகோதரிகள் சாமியை வேண்டுகின்றனர். அதன்பின், சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டுகின்றனர். கயிறு கட்டும் போது, சகோதரிகளுக்கு அன்பின் காணிக்கையாக பணம், நகை, பரிசுப் பொருட்களை சகோதர்கள் அளிக்கின்றனர். ஜாதி,மாத, இன, மொழி என எல்லாவற்றை கடந்து, ராக்கி காட்டும் பழக்கம் சகோதர அன்பை தெரிவிப்பதன் ஒரு முக்கிய வெளிப்பாடாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment